''அரசு தன் கால தாமதமான நடவடிக்கைகளின் வெளிப்பாட்டை , கடல் கடந்த தொழிலாளர்களின் தலைகளில் போட்டுத்  தப்பித்துக்  கொள்வது முறையல்ல - பொறுப்பு மிக்க அமைச்சர்கள் பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும்.'' அலி ஸாஹிர் மௌலானா 

இலங்கை அரசு தனது கால தாமதமான செயற்பாட்டின் மூலம்  செய்த பிழையினை, கடல் கடந்து சென்று நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக செயற்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது சுமத்தி தப்பித்து கொள்ளாமல் அவர்களை உரிய முறையில் கௌரவமாக நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா கூறியுள்ளார்.

அண்மையில்  அமைச்சர்  ஒருவர்,  மத்திய கிழக்கு நாட்டில் இருந்து வந்தவர்களை வெடிகுண்டுகளாக வர்ணித்தமை தொடர்பில் தனது அதிருப்தியை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிப்படுத்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து கடல் கடந்து பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் சென்று தாய் நாட்டிற்கும் தங்களது வீட்டிற்கும் தன்னலமற்ற முறையில் பொருளாதார பங்களிப்புகளை வழங்குகின்ற தியாகிகளான நம்மவர்கள் உண்மையிலேயே உன்னதமான செயல் வீரர்கள் , அந்நிய செலாவணியை எமக்கு வாரி வழங்கும்  சத்தமில்லாத சாதனையாளர்கள்.

அப்படிப்பட்டவர்கள் தங்களது அன்பான உறவுகளையும் , தாய் நாட்டையும்  விட்டு சென்று தியாகிகளாக பல தசாப்தங்களாக  பல்வேறு கஷ்டங்களையும் துயரங்களையும் தாங்கிக் கொண்டு அந்நிய செலாவணியை வாரி வழங்கி தேசிய பொருளாதாரத்துக்கு பல பங்களிப்புக்களை வழங்கி வருகிறார்கள், தாங்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைக்கச் சென்றாலும் , எத்தனையோ குடும்பங்களை மனிதாபிமான தன்மையுடன் வாழவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறானவர்களை மிகவும் கரிசனையுடன் , அவர்கள் தாயகம் வந்து சேருவதற்கு உதவ வேண்டுமே தவிர மாறாக அவர்களை கொரோனா தொற்றுக்காவிகள் என்றும் ,வெடிகுண்டுகள் என்றும்,  எங்களை வந்து அழிக்கப் பார்க்கிறார்கள் என்றும் சொல்லுவதன் ஊடாக அரசின் காலதாமதமான நடவடிக்கையின் வெளிப்பாட்டினை  மூடி மறைக்கப்  பார்க்கிறார்கள் , நாட்டின் முன்னேற்றத்துக்குக்  காரணமான தியாகிகளான வெளிநாட்டு தொழிலாளிகள் மீது அவதூறு சொல்லி அவர்களை மலினப்படுத்துவது ஏற்க முடியாத அநாகரிகமான செயலாகும், அவர்களது அத்தனை தியாகங்களையும் ,பங்களிப்புக்க ளயும் ஒதுக்கி தள்ளி விட்டு அவர்களை ஒரு குற்றவாளிகளை போல் சித்தரிப்பது அவர்களையும் அவர்களது உறவுகளையும் அகௌரவப் படுத்தும் செயற்பாடாகும் என தெரிவித்துள்ளார்.

அவர்களை உரிய நேரத்தில் கௌரவமாக அழைத்து வந்து ,பாதுகாத்து பராமரிக்க வேண்டியது இந்த அரசின் தலையாய கடமையாகும், அரசின் பிரதிநிதிகள் இவ்வாறான பிழையான சொற்பிரயோகங்களை பிரயோகிப்பதை தவிர்த்து முன்மாதிரியுடன் அவர்களது உணர்வுகளை மதித்து செயலாற்ற வேண்டும்,
அத்துடன் உலகளாவிய ரீதியில் பொருளாதார பின்னடைவுகளை எதிர் கொள்ளும் இந்தத்  தருணத்தில் மத்திய கிழக்கு உட்பட ஏனைய நாடுகள் அனைத்தோடும் நல்லுறவினை பேண வேண்டும், அவர்களோடு இணக்கத்தோடு செயற்பட்டு எமது நாட்டின் பிரஜைகளது நலன்களை பாதுகாக்கும் விடயத்தில் முன்மாதிரியுடன் செயற்படுவதே இன்றைய காலத்தின் தேவையாகும் , இதனை தவிர்த்து பொறுப்பு மிக்க அமைச்சர்கள் பொறுப்பற்ற வகையில் கருத்துக்களை வெளியிடுவது ஆரோக்கியமான செயற்பாடாக அமையாது என முன்னாள் இராஜாங்க  அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.