(எம்.எப்.எம்.பஸீர்)


உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஒரு சம்பவமான, தெமட்டகொடை - மஹவில கார்டன்  வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்த போது, அவ்வீட்டில் இருந்த இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்ட எவரும் அதிர்ச்சியடையவில்லை எனவும், குண்டை அப் பெண் வெடிக்கச் செய்ய முன்னர் பொலிஸார் அங்கு சென்றபோதும் அவ்வீட்டிலிருந்த பல பெண்கள் அழுதுகொண்டிருந்ததாகவும் சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் முன்னாள் சார்ஜன் தர உத்தியோகத்தரும் தற்போது வத்தளை பொலிஸ் நிலையத்தில் சார்ஜனாக கடமையாற்றுபவருமான வசந்த சிசிர குமார சாட்சியமளித்தார்.

அதனூடாக குறித்த தற்கொலை தாக்குதல்கள், தொடர்பிலான தகவல்களை அவர்கள் முன் கூட்டியே அறிந்திருந்திருக்கலாம் என தனக்கு எண்ணத் தோன்றுவதாகவும் அவர் சாட்சியமளித்தார்.

21/4/2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க, கடந்த 2019 செப்டெம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்றது.

இதன்போது 406 ஆவது சாட்சியாளராக ஆணைக் குழு முன்னிலையில் சட்ட மா அதிபர் திணைக்கள சட்டவாதிகளின் நெறிப்படுத்தலில் சார்ஜன் வசந்த சிசிர குமார சாட்சியமளித்தார். அதன்போதே அவர் மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார்.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலைமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி அகியோர் முன்னிலையில்  நேற்று  பிற்பகல் 12.30 மணி முதல்  குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.

 இதன்போது சாட்சியமளித்த சார்ஜன், வசந்த சிசிர குமார
'கடந்த 2016 முதல் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் நான் சேவையாற்றி வந்தேன். கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி காலை வழமை போன்று நான் கடமைக்கு சமூகமளித்தேன். அப்போது நாட்டில் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான தகவல்கள் கிடைத்தன.

 இவ்வாறான பின்னணியில், சி.சி.டி.யின் நிர்வாக பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர்  களுபான எனக்கு உப பொலிஸ் பரிசோதகர்  ரோஹன பண்டாரவுடன் சுற்றி வலைப்பொன்றுக்கு செல்ல ஆலோசனை வழங்கினார். அதன்படி சிவில் உடையில் உடனடியாக நாம் செல்ல தயாரானோம்.

உப பொலிஸ் பரிசோதகர், உதவி பொலிஸ் அத்தியட்சர் ரோஹன பண்டார, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சோமரத்னவிடம் இருந்து கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவலைப்புக்கு செல்வதாக எம்மிடம் கூறினார்.

 அதன்படி நாம் 6 பேர் சுற்றிவலைப்புக்கு லேன்ட் குறூஷர் வாகனத்தில் சென்றோம்.  உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன பண்டாரவிடம் மட்டும் அவரது கடமை நேர கைத்துப்பாக்கியும் 10 தோட்டாக்களும் இருந்தன. அதனைவிட கைவிலங்குகளையும் நாம் அவரது ஆலோசனைக்கு அமைய எடுத்துக்கொன்டோம்.

 வண்டியில் செல்லும் போதே நாம் இலக்கம் 658/90 எனும் முகவரியில் உள்ள வீட்டுக்கே சுற்றி வலைப்புக்கு செல்வது தெரிந்தது. எனினும் அங்கு நாம் குண்டுகளை அல்லது வெடி பொருட்களை தேடி செல்கின்றோம் என தெரியவில்லை. அப்படி நினைத்துக் கூட பார்க்கவில்லை. சட்ட விரோத பொருட்கள் அல்லது குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய எவரேனும் மறைந்துள்ளதால் வீட்டை சோதனை செய்யப் போவதாகவே நாம் எண்ணினோம்.

 மஹவில கார்டின் வீதியில் உரிய வீட்டு இலக்கத்தை, அவ்வீட்டின் மதிலில் பொறிக்கப்பட்டிருந்த பலகையில் இருந்து அடையாளம் கண்டோம்.
முதலில் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன பண்டார சென்று வீட்டில் பிரதான வாயிலை தட்டினார். நாம் பின்னே இருந்தோம்.

அப்போது சற்று வயதான ஒருவர் வந்து வாயிலைத் திறந்தார். பின்னர் அவர்தான் இப்ராஹீம் ஹாஜியார் என அறிந்துகொண்டேன்.
அங்கு மேலும் இரு ஆண்கள் இருந்தனர். அவ்விருவரையும் சோதனை செய்யுமாறு உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன பண்டார எம்முடன் வந்த கான்ஸ்டபிள் பெரேராவுக்கு பொறுப்புச் சாட்டினார். அந்த வீடு மூன்று கீழ்  தளத்தை தவிர்த்து 2 மாடிகளைக் கொண்டது.

 நாம் அங்கு உள் நுழையும் போதே சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொக்குஹெட்டியும் அவரது குழுவும் கூட அங்கு வந்தனர். லொக்கு ஹெட்டியின் கீழ் நான் சேவையாற்றியுள்ளதால் அவரை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டேன்.

 பின்னர் நாம் உள்ளே செல்லும் போது உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொக்கு ஹெட்டி,  இப்ராஹீம் ஹாஜியாரை விசாரித்துக்கொண்டிருந்தார்.
 நாம் மேல் மாடி நோக்கி செல்லலானோம்.

 அப்போது இரு படிகளை ஏறிய பின்னர் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன பண்டார, என்னை நோக்கி கீழ் தளத்தில் சில பெண்கள் இருப்பதாகவும் அவர்களை சோதனைச் செய்யுமாறும் கூறி என்னை அனுப்பிவிட்டு  துலஞ்சன, பண்டார ஆகிய  சக உத்தியோகத்தர்களுடன் அவர் மேல் தளத்துக்கு சென்றார்.

நான் கீழ் தளத்தில் ஒரு அறையில் சில பெண்கள் இருப்பதையும் சமயலறையில் சில பெண்கள் இருப்பதையும் அவதனைத்து அவர்களை ஒரு இடத்தில் ஒன்று சேர்த்தேன். அப்போதும் அவர்களில் சிலர் அழுதுகொண்டு இருந்ததை நான் அவதானித்தேன்.

 வீட்டை சோதனைச் செய்ய அங்கிருந்த எவரும் எதிர்ப்பு வெளிக்காட்டவில்லை. இந்நிலையில் மேல் மாடியில் அறையின் கதவை ரோஹன சேர் தட்டும் சத்தம் எனக்கு கேட்டது. ' நாங்கள் பொலிஸ்... சோதனை செய்ய வேண்டும்.. கதவை திறங்கள்' என அவர் பலமாக கதவை தட்டினார்.

அப்போது பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. அந்த சத்தத்துடன் நாங்கள் அனைவரும் வெளியே ஓடினோம். சி.ஐ.டி. உதவி பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொக்கு ஹெட்டி உள்ளிட்ட அனைவரும் பாதைக்கு ஓடினோம். வீட்டின் கீழ் தளத்தில் இருந்த பெண்கள் ஏனைய ஆண்கள் மூவர் உள்ளிட்டோரையும் வெளியே அழைத்து வந்தோம்.

 எனினும்  மேல் மாடிக்கு சென்ற ரோஹன சேர் தலைமையிலான மூவருக்கும் என்ன நடந்தது என தெரியவில்லை. நான் ரோஹன சேர் என பலமாக கத்தி கத்திக் கூப்பிட்டேன். எந்த பதிலும் இல்லை. வீடு முழுக்க  புகை மண்டலமாக காட்சியளித்தது. தீயும் பரவியது.

 அதனால் நான் உடனடியாக எனது நிர்வாக அதிகாரிக்கு கதைத்து மேலதிக படையினரை அனுப்புமாறும், வெடிப்பு இடம்பெற்றதையும் கூறினேன்.
 அதன் பின்னர் 10 நிமிடங்கலுக்குள் அதிரடிப்படை, இராணுவம், தீயனைப்பு படை என அனைவரும் வந்தனர். அப்போதும் மேல் மாடி நோக்கி யாராலும் செல்ல முடியவில்லை.

 இதனிடையே  மின்சாரத்தை தடைச் செய்ய உதவி பொலிஸ் அத்தியட்சர் லொக்கு ஹெட்டி, இப்ராஹீம் ஹாஜியாரை அழைத்துச் சென்றார். மேலே செல்வது சாத்தியமற்று காணப்பட்ட நிலையிலேயே மின்சார இணைப்பை தடை செய்ய அவர் அவ்வாறு முயன்றார்.

 இவ்வாறான நிலையில் முதல்  வெடிப்பு பதிவாகி 15 - 20 நிமிட இடை வெளியில் மீளவும் ஒரு வெடிப்புச் சத்தம் கேட்டது. அப்போதும் நாம் வெளியே ஓடி வந்தோம்.

அதன் பின்னர் அதிரடிப் படையினர் வீட்டின் மற்றொரு பகுதி ஊடாக ஏணியொன்றின் உதவிடன் உள் நுழைந்தனர். அப்போது எமது 3 சக உத்தியோகத்தர்களையும் காணவில்லை.

இந்நிலையில் நாமெலலாம் மேல் மாடிக்கு சென்று தேடும் போது, ரோஹன சேர் கதவை தட்டிய பகுதியின் சுவர் முற்றாக  இடிந்து மண், கல் உள்ளிட்டவற்றால் நிறைந்திருந்தை அவதானித்தேன்.

அப்போது ரோஹன சேரின்  கால் விளங்கியது. உடனடியாக மண்னை அகற்றி பார்த்த போது அவர் உயிரிழிந்த நிலையில் இருந்தார். அவருக்கு அருகே துலஞ்சன உளிட்ட ஏனைய இரு அதிகாரிகளும் கூட உயிரிழந்த நிலையில் இருந்தனர். அவர்களது நெற்றிப் பகுதிகள், கால் பகுதிகள் கடுமையாக காயப்பட்டிருந்தை அவதானிக்க முடிந்தது.

அந்த வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டோரை விசாரணைக்காக சி.ஐ.டி.யினடம் கையளித்தோம்.' என சாட்சியமளித்தார்.

 இந்நிலையில் இதுவரை வெளிப்படுத்தப்படாத, நேற்று முன்தினம் சி.ஐ.டி.யின் மனித படு கொலைகள் விசாரணைப் பிரிவின் பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் வழங்கிய சி.சி.ரி.வி. காணொளிகள் ஊடகங்களுக்கும் காண்பிக்கப்பட்டு மேலதிக சாட்சிகள்  சார்ஜன் வசந்த சிசிர குமாரவிடம் பதிவு செய்யப்பட்டது.

அந்த சி.சி.ரி.வி. காணொளி பிரகாரம், பிற்பகல் 2.31 மணிக்கே சி.சி.டி. குழு மஹவில கார்டுன் வீட்டுக்குள் உள்நுழைவது சில நிமிடங்களில் முதல் வெடிப்பு இடம்பெறுவதும், அதன்போது பொலிஸ் அதிகாரிகள் வீட்டில் இருந்தோருடன் வெளியே ஓடி வருவதும் தெளிவாக பதிவாகியுள்ளது.

அந்த சி.சி.ரி.வி.காட்சிகளை பரிசீலனைச செய்த போது, அவ்வீட்டில் இருந்தவர்கள் எந்த அதிர்ச்சியும் இன்றி இருந்ததை தான் அவதானித்ததாக சாட்சியம் அளித்த  சார்ஜன் வசந்த சிசிர குமார, இந்த தாக்குதல்களை அவர்கள் முன் கூட்டியே அறிந்திருந்ததாக தனக்கு எண்ணத் தோன்றுகின்றது எனதெரிவித்தார்.

இதனையயடுத்து தற்போது டாம் வீதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருக்கும் பிரதான பொலிஸ் பரிசோதகரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

 இன்று மீள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கூடும் நிலையில், இன்று மு.ப.9.30 மணிக்கு சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க சாட்சியமளிக்கவுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.