இதுவரை காலமும் ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டைகள் தகவல் திணைக்களித்தினால் வழங்கப்பட்டதை போலவே தொடர்ந்தும் வழங்கப்படும்  என தெரிவித்த அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்கள்,  குறித்த அடையாள அட்டைகளை பாதுகாப்பு அமைச்சின் ஊடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவருகின்ற செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

2020ம் ஆண்டுக்கான அடையாள அட்டைக்கான விண்ணப்பபடிவங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லையானது இம்மாதம் 20ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 3000க்கும் அதிகமான ஊடக அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

தொடர்ந்து கருத்து தெரிவித்த பணிப்பாளர் நாயகம்,

ஊடகச் சுதந்திரத்தினை எவ்வேளையிலும் பாதுகாப்பதற்கு பொறுப்புவாய்ந்த நிறுவனத் தலைவர் எனும் ரீதியில் தான் தொடர்ந்தும் பணியாற்றுவேன்.  எனவே இதுவரை காலமும் செயற்படுத்தப்பட்டுவந்த விதிமுறை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும். 

தகவல் திணைக்களத்தினால் இதுவரை காலமும் ஊடகவியலாளர்களின் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதைப் போன்று தொடர்ந்தும் அவ்வாறே வழங்கப்படும். எவ்வித காரணத்தினாலும் இந்த அடையாள அட்டை விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.