(எம்.எப்.எம்.பஸீர்)

முதலாம் வகுப்பு முதல் உயர்தரம் வரை ஒன்றாக கற்ற நண்பனால் தனக்கு பிரச்சினை ஏற்படும் என ஒரு போதும் நம்பவில்லை எனவும், தற்போது அந்த நண்பனை நம்பியதால் தான் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உடற்கூற்று வைத்திய நிபுணர் ஒருவர் நேற்று சாட்சியமளித்தார்.  குண்டு பரிசோதனையின் போது காயமடைந்திருக்கலாம் என நம்பப்படும் சஹ்ரானின் சகோதரர் ரில்வானுக்கு (சாய்ந்தமருதில் தற்கொலை செய்த குழுவுக்கு தலைமை வகித்தவர்), சிகிச்சையளிக்க உதவியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த சம்பவம் இடம்பெற்ற கடந்த 2018 ஆகஸ்ட் மாதங்களாகும் போது, தனக்கு சஹ்ரான் யார் என்றே தெரியாது எனவும், ரில்வானையும் தெரியாது என சாட்சியமளித்த அவர், தனது நண்பனான மொஹம்மது அலியார் மன்சூர் ரிலா தனக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு எரிவாயு சிலிண்டர்  வெடித்து காயம் ஏற்பட்டுள்ளதாக  கூறி முதல் உதவி தொடர்பில் ஆலோசனை கோரியதாலேயே அது தொடர்பில் தான் செயற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் தனது நண்பனான ரிலா, 2018 டிசம்பர் மாதம் சஹ்ரானுடன் தனது வீட்டுக்கு வந்ததாகவும், அப்போதே சஹ்ரானை முதலில் பார்த்ததாகவும், அதன்போது அவர்தான் சஹ்ரான் மெளலவி என நண்பர் அறிமுகம் செய்ததாகவும் கூறிய அவர், அன்றைய தினமே அவரது சகோதரனுக்கே சிகிச்சைப் பெறதான் உதவியமை தொடர்பில் அறிந்துகொண்டதாகவும், 2019 ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரே சஹ்ரான் உள்ளிட்டோரின் உண்மை முகத்தை தான் அறிந்ததாகவும் அவர் சாட்சியமளித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போதும் தான் கடமையாற்றுவதால், ஊடகங்களுக்கு தனது சாட்சியை வழங்க வேண்டாம் என அவர் கோரியபோதும், ஆணைக் குழு அவரது பெயரை வெளியிடாமல் சாட்சியத்தை வெளிப்படுத்த ஊடகங்களுக்கு அனுமதியளித்தது.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.
 இதன்போது தொடர்ந்தும் சாட்சியமளித்த குறித்த வைத்தியர் கூறியவை சுருக்கமாக வருமாறு:

“நான் மருதமுனையை சேர்ந்தவன். அல் மனார் மத்திய கல்லூரியில் கல்வி கற்றேன். பின்னர் யாழ். பல்கலைக் கழகத்துக்கு தெரிவாகினேன். எவ்வாறாயினும் அப்போதைய நாட்டின் சூழலை கருத்தில் கொண்டு கொழும்பு பல்கலைக் கழக்த்திலேயே கல்வி கற்றேன்.

2012 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றேன். பயிற்சிக் காலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிறைவு செய்தேன். அதன் பின்னர் முதல் பணி இடமாக கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையும் அமையப்பெற்றது. அங்கு இருக்கும் போதே பட்டப் படிப்பை ஆரம்பித்தேன். அதன்பொருட்டு கண்டி, பேராதெனிய வைத்தியசாலைகளும் கடமையாற்றினேன். தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றேன்.
(இதன்போது எம்.ஐ. ஷாஹித் எனும் பெயரில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதுகாவலராக எம்.ஐ. சாதிக் என குறிப்பிடப்பட்டிருந்த வைத்தியசாலையின் கட்டில் அறிக்கை ஒன்றினை காட்டி சிரேஷ்ட  அரச சட்டவாதியால் வைத்தியரின் சாட்சியம் நெறிப்படுத்தப்பட்டது.)

 எனது நண்பர் ஒருவர் உள்ளார். அவரது பெயர் ரிலா. முழுப் பெயர் மொஹம்மட் அலியார் மன்சூர் ரிலா. முதலாம் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்தோம். உயர் தரத்தில் அவர்  கணிதம் கற்றார். நான் உயிரியல் கற்றேன். அவர் பேராதனை அல்கலைக்கு தெரிவாகி பொறியியலாளரானார்.

 அவர் சவூதி அரேபியாவில் பணியாற்றிய நிலையில் தான், 2018 ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி அதிகாலை 1.38 இற்கு எனக்கு ஒரு அழைப்பு வந்தது. எனது இலக்கத்துக்கு அந்த சவூதி இலக்கத்தில் இருந்து அந்த அழைப்பு வந்தது.

 ரிலாவே கதைத்தார். சாதரணமாக நான் வைத்தியர் என்பதால், ரிலா வைத்திய ஆலோசனைகளை என்னிடம் பெற்றுக்கொள்வார். அந்த வகையில் அன்றும், தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு   எரிவாயு சிலிண்டர் வெடித்து காயம் ஏற்பட்டுள்ளதாகவும் என்ன முதலுதவி செய்யலாம் எனவும் கோரினார்.
 அப்போது நான் முதலில் காயங்கள் குறித்த புகைப்படங்களை அனுப்புமாறு அவருக்கு தெரிவித்தேன்.

 பின்னர் உள்ளூர் இலக்கம் ஒன்றிலிருந்து வட்ஸ் அப் ஊடாக புகைப்படங்கள் வந்தன. அவற்றை பார்த்தேன். எரிகாயங்கள் இருந்தன. முகம் கைகளில் அவை இருந்தன. ஒரு கையில் விரல்கள் கழன்று இருந்தன. நோயாளர் கண்களை மூடிக்கொண்டிருந்தார். அதனை பார்த்ததும் நோயாளரின் உயிருக்கு ஆபத்து என தெரிந்தது.
பின்னர் எனது நன்பர் ரிலா மீள அழைத்தார். அப்போது நான் அவருக்கு விடயத்தை கூறினேன். நிலைமை ஆபத்தானது போன்று உள்ளது. எனவே உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள். என அவருக்கு நான் கூறினேன். அத்துடன்  எரிகாயங்கள் அதிகமாக இருந்ததால் அவருக்கு சிறந்த சிகிச்சைகளை அளிக்க வல்ல சில வைத்தியசாலைகளையும் பரிந்துரைந்தேன். மட்டக்கலப்பு, கண்டி, கொழும்பு தேசிய வைத்தியசாலைகளே அவை.  எனினும் நோயாளர் நாட்டின் எந்த இடத்தில் உள்ளார் என்பதை நான் கேட்கவும் இல்லை. நண்பர் கூறவும் இல்லை.

பின்னர் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வந்துகொண்டிருப்பதாக 2018 ஆகஸ்ட் 27 முற்பகல் வேளையில் தன்னை ரிலாவின் நெருக்கமானவர் என அறிமுகப்படுத்திக்கொண்ட மொஹமட் என பெயரை  கூறிய ஒருவர் தொலைபேசியில் கூறினார்.

இந்நிலையிலேயே நான் நோயாளர்  அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 79 ஆம் சிகிச்சையறையிலும் இருந்த போது சென்று  விசாரித்தேன். பின்னர் 2018 டிசம்பர் மாதம் அளவில்,  ரிலா, எனது வீட்டுக்கு வந்தார். சவூதியில் இருந்து வந்துவிட்டதாக  தொலைபேசியில் கூறியே அவர் என்னை சந்திக்க வந்தார். அவருடன் மேலும் மூவர் இருந்தனர்.

ஒருவரை சஹ்ரான் மெளலவி என அறிமுகம்ச் செய்தார். அவரது சகோதரருக்கே எரிவாயு சிலிண்டர் வெடித்து காயம் ஏற்பட்டதாகவும், செய்த உதவிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். அப்போது அவரது சகோதரரின் தற்போதைய நிலைமை குறித்தும் நான் விசாரித்தேன்.
அதுதான் சஹ்ரானை முதலும் கடைசியுமாக சந்தித்த்து.
கடந்த 2020 ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரேயே சஹ்ரான், சிகிச்சைக்கு வந்த ரில்வான் உள்ளிட்டோரின் உண்மை முகத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

 எனது நண்பனால் இன்று நான் சிக்கலை சந்தித்துள்ளேன். அதனாலேயே இன்று இவ்வாணைக் குழுவில் சாட்சியம் அளித்துக்கொண்டிருக்கின்றேன் என சாட்சியமளித்தார்.

 இதன்போது விஷேடமாக ஆணைக் குழு  தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வாவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு குறித்த வைத்தியர் தனது பள்ளிப்பருவம், ரிலாவுடனான நட்பு, இஸ்லாமிய நம்பிக்கைகள்,  முஸ்லிம் பெண்களின் ஆடை,  தப்லீக், தெளஹீத், ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வான், அகில இலங்கை ஜம் ஈய்யதுல் உலமா சபை ஆகியன தொடர்பிலும் தனது நிலைப்பாட்டை சாட்சியமாக பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது
Blogger இயக்குவது.