கடந்த மே மாதத்தில்
'தீவிரமாக கட்டமைக்கப்படும் இனவாத அரசியலும்
இலங்கை முஸ்லிம்களும்”
எனும் தலைப்பில் தொடர் ஒன்றை எழுதி இருந்தேன்.

அதில் நான் குறிப்பிட்டிருந்த இரண்டு விடயங்களும் பொத்துவில் நிலப் பிரச்சினையின்  பின்னணியை விளங்குவதற்கு ஏதுவாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

அந்த விடயம் இதுதான்
-------------------------------------------------------------------------
இன்றுள்ள இலங்கையின் அரசியல் நிலையானது இனவாத வாக்குகளை இரண்டுவிதமாக பெற்றுக்கொள்ள நாடுகின்றது.

1. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அழிவுகளை செய்வதனூடாக இனவாத வாக்குகளை நேரடியாக பெற்றுக்கொள்வது.

2. இவ்வாறான இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக முஸ்லிம்கள் குரல் கொடுப்பதை சில சிங்கள ஊடகங்கள் பிழையாகச் சித்தரித்து முஸ்லிம் எதிர்ப்பு வாதத்தை உருவாக்கி அதனூடாக இனவாத சிங்கள வாக்குகளை மேலும் அதிகரிப்பது.
-----------------------------------------------------------------------------------
இந்த நிலைதான் இன்று உருவாகி இருக்கின்ற பொத்துவில் பிரச்சினையின் பின்னணியாகும்.

இது தேர்தல் காலம் என்பதால் சிங்கள வாக்குகளை பெறுவதற்கு பேசுபொருள் வேண்டும். அதிலும் குறிப்பாக 3 இல் 2 பெரும்பான்மை பெறுவதற்கு இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளை தெற்கிலே பிரசாரமாகப் பயன்படுத்த முடியும்.
-------------------------------------------------------
அதாவது, எங்குளுடைய நாட்டில் எங்களுடைய பௌத்த நிலங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள் அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அம்மக்கள் எதிர்க்கிறார்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் எனவே இதனை நாங்கள் விட்டுவிட முடியாது இதற்காகத்தான் நாங்கள் 3 இல் 2 பெரும்பான்மை அதிகாரத்தை கேட்கிறோம். அதனை நீங்கள் எமக்குத் தந்தால் இந்த நாட்டை முழுமையான ஒரு பௌத்த நாடாக ஆக்கிவிடலாம் என்று தெற்கிலே தங்கள் தேர்தல் பிரசாரங்களை செய்வார்கள்.
--------------------------------------------------------------------------
இத்தகைய பிரசாரங்களுக்கு தீனிபோடுவதாக எமது ஆர்ப்பாட்டங்கள் அவர்களுக்குச் சாதகமான ஒரு முடிவை கொடுக்கிறது.

இதற்காக நாங்கள் எங்கள் எதிர்ப்பினையும் ஆர்ப்பாட்டத்தினையும் செய்யாமலும் இருக்க முடியாது.

அப்படி இருந்தால் எங்களுடைய நிலங்களை நாம் பறிகொடுக்க நேரிடும்.

இதற்காகத்தான் அவர்கள் கொண்டுவருகின்ற எல்லாப் பிரச்சினைகளும் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளாக இருக்காது. மாறாக அப்பிரச்சினைகள் எல்லாம் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடியதும் எதிர்ப்புக்கொடி காட்டக்கூடியதுமாகவே  நிச்சயம் இருக்கும்.

சாதாரண பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது எல்லாம் பெரிசு படுத்தக்கூடிய பிரச்சினைகளாகவே உருவாக்கப்படும். இத்துடன் முடியாது இந்த தேர்தல் காலத்தில் இன்னும் சில இடங்கள் தொல்பொருள் நிலங்கள் என்ற ஜனாதிபதி செயலணியால் அடையாளம் காட்டப்படலாம்.

தேர்தல் காலம் என்பதால் இது அவர்களுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போன்றது.

அதாவது அவர்கள் கொண்டுவரும் பிரச்சினைகளை நாம் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தால் அதனை நாம் பறிகொடுக்க வேண்டிவரும்.

மாறாக எதிர்த்து போராடினால் அதனை தங்களுக்குச் சாதகமான தேர்தல் பிரசாரமாக மாற்றி சிங்கள வாக்குகளை பெறுவார்கள்.

அதுமட்டுமல்ல, நாம் எதிர்ப்பதனை வைத்துக்கொண்டு அவர்கள் அதனை கைவிடப்போவதுமில்லை இதற்கு பல உதாரணங்கள் கடந்தகாலங்களில் இருக்கின்றது. இறுதியாகக் கூறினால் இறக்காமம் மாயக்கல்லி மலையைக் குறிப்பிடலாம்.

ஆக, நாம் எதிர்ப்பதனால் அவர்கள் எதையும் கைவிடப் போவதுமில்லை அதேநேரம் எமது எதிர்ப்பைக்காட்டி தெற்கிலே சிங்கள வாக்குகளை அதிகரித்துக் கொள்ளவும் பயன்படுத்துகிறார்கள்.

எனவே இதில் இரண்டு இலாபம் அவர்களுக்கு எப்படியும் கிடைக்கவே போகிறது. நிலத்தையும் பெறுவார்கள் வாக்கையும் பெறுவார்கள்.

இந்த நிலையில் நாம் என்ன செய்வது?

1. களத்திலே போராடாமல் எமது நியாயங்களை உரிய அதிகாரிகள் நிர்வாக உயர் மட்டங்களில் மேலான பேச்சுவார்த்தைகளை உயர் சமூக குழுக்களை கொண்டு அமைதியாகச் செய்வதா?

2. நீதிமன்ற முறையீட்டினை செய்து நீதி தேடுவதா?

இது தேர்தல் காலம் என்பதால் எமது வேட்பாளர்களும் தங்களை சமூகக் காவலர்களாக காட்டிக்கொள்ள இதனை பயன்படுத்தும் ஒரு நிலையும் தெரிகிறது. தாங்கள் வாக்குகளைப் பெறுவதற்கு மக்களைப் போராட்டத்தில் வைத்துக்கொண்டிருக்கும் பொத்துவில் வேட்பாளர்கள்  இப்பிரச்சினைகளை தூரநோக்கோடும் பார்க்க வேண்டும்.

அதாவது தேர்தலுக்கு வாக்குப் பெறுகின்ற ஒரு பிரச்சினையாக இதனை தெற்கிலுள்ளவர்களுக்கு ஆக்காமல் உரிய நடவடிக்கைகைளை உரிய உரிய இடங்களுக்கு உரிய உரிய நபர்களைக்கொண்டு நடவடிக்கை எடுக்க வைக்கும் செயற்பாடு இதில் முக்கியம்.

உணர்ச்சிவசப்பட்டதாக இல்லாமல் அறிவு வசப்பட்டதாவும் எமது போராட்டங்களை செய்யலாம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.