உயர்தர பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு சில தரப்பினர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயர்தர பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையை ஒத்திவைப்பதற்கு கல்வி அமைச்சு சமீபத்தில் தீர்மானித்தது.

இதற்கு அமைவாக உயர்தர பரீட்சையை செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொழிற்சங்கம் மற்றும் இதர தரப்பினர் பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புக்கள் பல மாதங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததினால் பாடத்திட்டத்தை முழுமைப்படுத்துவதற்கு போதுமான காலம் இருக்கவில்லை என்று இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த வருடத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாகவும் இந்த வருடத்தில் கொரொனா வைரசின் காரணமாகவும்; பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படுமானால் ஏனைய பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் பரீட்சைகள் நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உயர்தர பரீட்சையை ஒத்தி வைத்தால் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான காலம் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைய செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி உயர்தர பரீட்சையை நடத்துவதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.