மூதூர்க் காணிகளை அபகரிக்கும் முன்னேற்பாடு தான் பிரதேச செயலாளரை ஓரங்கட்டிய செயற்பாடு என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

மூதூர்ப்பிரதேச ஆதரவாளர்களுடனான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்ற போது இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்தி பாதுகாப்பதற்கென ஜனாதிபதியினால் செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதும் அதில் எந்தவொரு தமிழ் முஸ்லிம் உத்தியோகத்தர்களும் இல்லை என்பதும் அனைவரும் அறிந்த விடயம்.

இப்போது இந்த செயலணி தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. நியாயமான முறையில் எந்தக் காணியும் எடுக்க முடியாது என்பது இந்த செயலணிக்கு தெரியும். எனவே நியாயமற்ற முறையில் பொய்க் காரணிகளை காட்டி சில காணிகளை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
முஸ்லிம் அதிகாரிகளை வைத்துக்கொண்டு இதனை நடைமுறைப்படுத்த முடியாது என்பதற்காக முஸ்லிம் அதிகாரிகளை ஓங்கட்டும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக மூதூர் பிரதேச செயலாளர் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இதன் பின்னணியில் மூதூர் மக்கள் பரம்பரை பரம்பரையாக பராமரித்து வந்த சில காணிகள் எடுக்கப்படவுள்ளன. மூதூர்ப் பிரதேச மக்கள் இந்த விடயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். தேர்தல் நடைபெறவுள்ள காலத்திலேயே இப்படியொரு செயற்பாட்டை அரசு முன்னெடுத்துள்ளது என்றால் தேர்தல் முடிந்த பின் இந்த அரசு என்ன செய்யும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
குறைந்த பட்சம் நமக்காக நமது உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். அப்போது தான் சில விடயங்களை தட்டிக்கேட்கும் நிலையை நாம் உருவாக்கலாம்.

சிறுசிறு கசப்புகளை வைத்துக்கொண்டு நமக்கு ஆபத்து விளைவிக்கும் கட்சிக்கு நாம் வாக்களிப்போமானால் அடுத்து வரும் 5 வருட காலத்திற்கும் நாம் பெருமளவு உரிமைகளை இழக்கும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது இக்கால கட்டத்தில் மிகவும் அவசியமாகும்.

எனவே இந்த விடயங்களை மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் சகல மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த தகவலை வாசிப்பவர்கள் ஒவ்வொரு பொதுமகனினதும் கவனத்திற்கும் இதனை எத்தி வைக்க வேண்டும். அதன் மூலம் சகல குடும்பங்களுக்கும் இத்தகவல் சேர வேண்டும்.
சிறுசிறு சொந்த இலாபங்களுக்காக நமது வாக்குகளை நமக்கு ஆபத்து விளைவிக்கும் கட்சிக்கு வழங்கி சமூகத்தை பாதிக்கப்பட செய்து விடக் கூடாது என சகலரையும் மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன். நான் என்னால் முடியுமானவரை இவ்வாறான விடயங்கள் தொடர்பில் குரல் எழுப்பி வருவேன் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
எனவே இந்த விடயங்கள் தொடர்பில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் தொலைபேசிச் சின்னத்துக்கு வாக்களித்து விருப்பமானவர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.