(எம்.எப்.எம்.பஸீர்)


கருணா அம்மான் என பரவலாக அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள, சர்ச்சைக்குரிய கருத்து, தொடர்பில் இன்று சி.ஐ.டி. சுமார் 7 மணி நேரம் வரை அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தது.

சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகமான 4 ஆம் மாடிக்கு இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆஜராகிய கருணாவிடம் மாலை 5.30 மணி வரை விசாரணைகள் நடாத்தப்பட்டிருந்தன.

சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவின் முதலாம் இலக்க விசாரணை அறையின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல தலைமையிலான சிறப்புக் குழு, உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் வழி நடாத்தலில் இந்த விசாரணைகளை முன்னெடுத்தது.

இலக்கம் 964/2, பன்னிபிட்டிய வீதி, ஜாதிக ஹெல உருமய, பத்தரமுல்லை எனும் முகவரியைச் சேர்ந்த ஹெடில்லே விமலசார எனும் தேரர் பொலிஸ் மா அதிபருக்கு அளித்த முறைப்பாடு, சி.ஐ.டி.க்கு விசாரணைகளுக்காக வழங்கப்பட்ட நிலையிலேயே, அதனை மையப்படுத்தி இந்த விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்போது கருணா அம்மானிடம் சி.ஐ.டி. விஷேட வாக்கு மூலம் ஒன்றினையும் பதிவு செய்ததுடன், அவசியம் ஏற்படின் மீள விசாரணைக்கு அழைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
யுத்த காலத்தில் இராணுவத்தினரில் 2000 முதல் 3000 எண்ணிக்கையினரை தான் புலிகள் அமைப்பில் இருக்கும் போது கொலை செய்திருந்ததாக கருணா அம்மான் என பரவலாக அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள விடயம் தொடர்பில் சி.ஐ.டி. ஆரம்பித்துள்ள குற்றவியல் விசாரணைகளில் ஒரு அங்கமாகவே கருணாவிடம் இந்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர், அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரேயே சட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்க முடியும் என கூறினார்.

கருணா அம்மான் எனும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள, சர்ச்சைக்குரிய கருத்து, அதன் உள்ளடக்கத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழு விசாரணைகளை கடந்த 4 தினக்களுக்கு முன்னர் ஆரம்பித்தது.
பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவுக்கு விடுத்துள்ள விஷேட உத்தரவுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸின் நேரடி கட்டுப்பாட்ட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இயங்கும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்தபயாகலவை பிரதான விசாரணை அதிகாரியாக கொண்டதாக இந்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சி.ஐ.டி.யின் இரு குழுக்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு பகுதிகளுக்கு நேற்று சென்று, கருணா அம்மான், குறித்த சர்ச்சைக்குரிய விடயங்களை வெளிப்படுத்திய நிகழ்வு தொடர்பிலும் அதில் பங்கேற்றவர்கள் தொடர்பிலும் விஷேட விசாரணைகளை ஆரம்பித்து வாக்கு மூலங்களை பதிவு செய்ய ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் சி.ஐ.டி. வாக்கு மூலம் பெற அழைத்த போது சுகயீனம் காரணமாக வர முடியாது என அறிவித்த கருணா அம்மான், இன்று ஆஜராகி வாக்கு மூலம் வழங்கினார்.

இந்நிலையில் வாக்கு மூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
'நான் நடந்த உண்மையைக் கூறியிருக்கின்றேன். எதுவித தவறான கண்ணோட்டத்திலும் எதுவும் நான் கொடுக்கவில்லை. எவரையும் புண்படுத்தும் விதத்திலும் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஆகவே, அதுவொரு ஊடகத்தால் வந்த ஒரு சின்ன ஒரு இது.

ஆகவே, இந்த நாட்டு மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். எங்களுடைய தேர்தல் பிரசாரம் தொடரும். ஆனால் எதுவித வன்முறையும் இனத்துவேசமும் இல்லாத விதத்தில் தேர்தல் பிரசாரத்தை கொண்டு செல்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் அரசியல்வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தவறான விடயம். அந்தக் காலத்தில் நடந்த விடயத்தை ஒரு உவமைக்காக, மேடைப் பிரசாரமாக, தேர்தல் பிரசாரமாகக் கூறப்பட்ட விடயம். ஆகவே, இதை பூதாகரமாக்குவதில் எதுவித அர்த்தமும் இல்லை.

எங்களுடைய அரசாங்கத்திற்கு சிங்கள மக்களின் வாக்குகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சினை இது. ஆகவே, இதை நாங்கள் முறியடித்து வெற்றியடைவோம் என்பதைக் கூறிக் கொள்கின்றேன்' என தெரிவித்துள்ளார்.

அத்துடன் கருணாவின் கருத்து தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பில் ஏதேனும் விடயங்கள் முன்வைக்கப்பட்டதா என ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கருணா,

'இல்லை. அம்பாறை மாவட்டத்தில் நாங்கள் ஒரு தனித் தமிழ் கட்சியாகப் போட்டியிடுகின்றோம். என்னைப் பொறுத்த வரையில் எந்தவொரு கட்சியினரையோ, எந்தவொரு மத குருமார்களையோ புண்படுத்துகின்ற மாதிரி எதுவும் கதைக்கவில்லை.
அதேநேரத்தில், இராணுவத்தையும் நாங்கள் குறைக்க விரும்பவில்லை. எங்களது இராணுவம் பல சாதனைகளைப் படைத்து பல அனர்த்தங்கள் வருகின்றபோது மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற இராணுவம். அந்த வகையில் நான் அதனை ஒரு நாளும் குறைத்து எதனையும் கூறவில்லை' என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.