கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மேற்கிந்திய திவுகள் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ம் திகதி ஆரம்பிக்கின்றது. 28-ம் திகதியுடன் தொடர் முடிகிறது

இந்த தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடன் விளையாடுகிறது. பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் ஆடுவதற்காக இன்று (28) இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.

இங்கிலாந்து செல்ல இருக்கும் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினரிடம் அவரவர் வீடுகளுக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே முஹம்மது ஹபீஸ் தனது திருப்திக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதைக் குறிக்கும் நெகட்டிவ் முடிவு வந்தது.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்திய சோதனையில் குளறுபடியா? என்ற சந்தேகம் மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டது. இதற்கிடையில் முஹம்மது ஹபீஸ்க்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டபோது பாசிட்டிவ் வந்தது.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம் மீது முன்னாள் தலைவர் இன்சமாம் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்களின் செல்போன் அழைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவர்கள் தவிர்ப்பதாக தகவல்கள் வருகின்றன. இது தவறான செயலாகும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்ற எண்ணம் கொரோனா பாசிட்டிவ் வீரர்களுக்கு ஏற்பட்டுவிடும். பாதிக்கப்பட்ட வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

நான் கூறுவது எல்லாம், பாதிக்கப்பட்ட வீரர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் முஹம்மது ஹபீஸ் பிரச்சினையை அடுத்து மற்ற வீரர்களும் அதேபோன்று செல்ல வேண்டிய நிலை ஏற்படும். 

பாசிட்டிவ் வீரர்களை வீட்டிற்குள்ளே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்பதை விட தேசிய கிரிக்கெட் அகடமிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு போதுமான இட வசதி உள்ளது. அவர்கள் நம்முடைய வீரர்கள். முழுமையாக குணமடையும் வரை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இன்சமாம் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.