மரமொன்றை நட்டு உலகை வளப்படுத்துவோம்! 
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் கோரிக்கை


ஆண்டுதோறும் ஜூன் மாதம் ஐந்தாம் திகதி சர்வதேச சூழல் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள ஒரு சூழலில் இன்றைய தினத்தின் முக்கியத்துவம் உணரப்படவோ அல்லது அதனடிப்படையில் ஏதாவது பயனுள்ள முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் ஒரு சூழலோ இல்லாமல் இருக்கலாம். எனவேதான் நாம் இந்த விடயத்தில் கவனம் செலுத்துகிறோம்.

சூழலென்பது மனிதனும் மனிதனைச் சூழவுள்ள அனைத்துமாகும். அதிலும் குறிப்பாக இயற்கை வளங்கள் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. இயற்கை வளங்களில் மரங்கள் இன்றியமைதன. புவியின் இருப்பையும் வளத்தையும் செழிப்பையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதில் மரங்களின் பங்களிப்பு மகத்தானது. மனிதர்களாலும் ஏனைய கைத்தொழில் உற்பத்தி முயற்சிகளாலும் வெளியிடப்படும் காபனீரொக்சைட் உட்பட ஏனைய விஷ வாயுக்களை மரங்களே உள்வாங்கி மனித உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத ஒட்சிசனை உற்பத்தி செய்கின்றன. இச்செயற்பாடு பச்சையாக்கம் எனப்படுகிறது.

உலகிலுள்ள மதங்களும் சிந்தனைகளும் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கின்றன. குறிப்பாக மரங்களைப் பேணுவதிலும் நடுவதிலும் இஸ்லாம் அதிகூடிய அக்கறை காட்டுகிறது. மனிதன் இறந்த பின்னரும் அவனுக்குத் தொடர்ந்தும் நன்மைகளைக் கொண்டுதரக்கூடிய சில செயல்களை இஸ்லாம் ஸதக்கதுல் ஜாரியா அதாவது நிலையான தர்மங்கள் எனக் காட்டித் தந்துள்ளன. உலகில் வாழும் காலத்தில் ஒரு மனிதன் செய்யும் மூன்று செயல்கள் அவன் இறந்த பின்னரும் அவனுக்குத் தொடர்ந்தும் நன்மைகளைக் கொண்டுதருகின்றன. ஒருவர் கற்றுக்கொடுத்த பயனுள்ள கல்வி, நிறுவிச் செல்லும் கல்விக் கூடங்கள். கிணறுகள், நீர்நிலைகள். தனக்காப் பிரார்த்தனை செய்யக்கூடிய நல்ல பிள்ளைகளை உருவாக்கிச் செல்லுதல், மற்றும் கனிதரும் மரங்களை நட்டிச் செல்லல் என்பன நிலையான தர்மங்களென இஸ்லாம் அடையாளம் காட்டி நிற்கிறது. யுத்தச் சூழல் ஒன்றின்போதுகூட மரங்களை வெட்டுவது, நீர்நிலைகளை அழிப்பது, கல்விக் கூடங்களை, அறிவகங்களை அழிக்க முடியாது, பிற மதத்தலங்களை அழிக்கக் கூடாது, பயிர் நிலங்களை அழிக்க முடியாது, பெண்கள், குழந்தைகளைக் கொல்ல முடியாது, மரங்களை வெட்டக்கூடாது என கண்டிப்பான கட்டளைகளைப் பிறப்பித்துள்ளது இஸ்லாம்.

அடுத்த கணம் தன் உயிர்பிரிந்து விடலாம் எனும் ஒரு நிலை இருக்கும்போதுகூட உங்கள் கையில் ஒரு விதையோ செடியோ இருந்தால் அதனை உடனே நட்டிவிடுங்கள் என்பது நபிகளாரின் உபதேசமாகும். ஒருவர் நட்டிச் செல்லும் மரத்திலிருந்து மனிதர்களும் பறவை பட்சிகளும் உண்ணும் காலமெல்லாம் மரணித்துள்ள அந்த மனிதனுக்குத் தொடர்ந்தும் நன்மைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். மரங்களை நடுங்கள் எனும்போது அதைப் பலரும் அக்கறையோடு எடுத்துக் கொள்வதில்லை. அதனால் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஒரு தேசிய மர நடுகைத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாகக் கடந்தாண்டிலும் வடக்கில் பல பாடசாலைகளில் கிராமங்களில் எமது சம்மேளனம் இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. இந்த முயற்சியில் கிராமங்களில், பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்கள் கூட்டாக ஒன்றிணைந்து இந்தப் பணியை முன்னெடுக்கலாம்.

ஒவ்வொரு வீட்டுக்கும் பயனுள்ள ஒரு செடியை விநியோகித்து அந்த வீட்டின் குடும்பத்தில் மரணித்திருக்கும் எவராவது ஒருவரின் பெயரில் அந்தச் செடியை நட்டிப் பேணிவருமாறு வழிகாட்டலாம். அப்படிச் சொல்லும்போது அது உணர்வுபூர்வமாக உள்வாங்கப்படும். நடப்படும் அந்தச் செடியின் மீதும் எல்லோருக்கும் அதிகூடிய அன்பும் அக்கறையும் ஏற்படும். அந்தச் செடி நிச்சயமாக நன்றாகப் பராமரிக்கப்படும். 

முஸ்லிம்கள் நாட்டின் வளர்ச்சியில், மரங்கள் நடுவதில், சூழல் பாதுகாப்பில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்றொரு தவறான எண்ணம் இந்நாட்டில் வளர்க்கப்பட்டுவரும் இக்கால கட்டத்தில் நாம் கூட்டாக மரங்களை நடும் பணியில் ஈடுபட முன்வருவோமாக ! அதனூடாக நாட்டின் தேசிய நலனுக்குப் பங்களிப்புச் செய்வோமாக !

லுக்மான் சகாப்தீன்
தேசிய தலைவர் - அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.