நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்ற தவறும் பட்சத்தில் கொரோனா வைரசு தொற்று சமூகத்தில் அதிகளவு பரவுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விடயத்தில் நாம் வெற்றியை அடைந்து விட்டோம் என்று எண்ணுவதற்கான நேரம் இது அல்ல என்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தொற்று தொடர்பில் அபிவிருத்தியடைந்துள்ள ஜெர்மனி, நியூஸிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தற்போது என்ன நேர்ந்தது என்பதை அறிந்திருப்பீர்கள். இந்நாடுகளில் தொற்றுக்குள்ளானோர் மீண்டும் பதிவாகும் நிலை தற்போது அங்கு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரசு தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்..

´கொரோனா தொற்றை தடுப்பதற்கு அனைவரும் முதலில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தனிமைப்படுத்தல் சட்டத்தை முடிந்தளவு பின்பற்றுங்கள் என்று விபரித்த அவர் எதிர்காலத்தில் விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் இந்த வைரசு பரவுவதைத் தடுப்பதற்கு தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றுவது முக்கியமானது என்றும் கூறினார்..

தொற்றுக் காலத்திற்கு மத்தியிலும் , அதேபோன்று இறுதியிலும் கொரோனா தொற்றில் இருந்து நாம் முழுமையாக பாகாக்கப்பட வேண்டும். என்பதற்காக , நாம் 46 வழிமுறைகளை நாட்டிற்கு அறிமுகப்படுத்தினோம். இந்த வழிமுறைகளில் மூன்று விடயங்களைப் பிரதான இலக்காக வைத்தோம். சமூக இடைவெளி, முகக்கவசம், கைகளை சுத்தமாக வைத்திருக்கும் செயற்பாடு ஆகியனவே அந்த மூன்றுமாகும்.

அண்மைக்காலமாக மக்கள், சில நிறுவனங்கள், சில அதிகாரத் தரப்பினர் இந்த விடயங்கள் குறித்து ஆர்வமின்றி இருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நமது நாட்டில் இந்த வைரசு தொற்று இல்லை எதற்காக இதனை நடைமுறைப்படுத்துகிறீர்கள் என்று எவரேனும் ஒருவர் கேள்வி எழுப்பலாம் என்று சுட்டிக்காட்டிய அவர், எம்மை விட பாரியளவில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படாத காரணத்தாலேயே அங்கு தொடர்ச்சியாக வைரஸ் தொற்றுக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.