(செ.தேன்மொழி)

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியால் 90 ஆசனங்களை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மனோ கணேசன், செயல்படும் வீரனின் ஆட்சி செயற்திறன் அற்றதாக இருப்பதாக ஜனாதிபதியே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இது தங்களின் வெற்றிக்கு மேலும் சாதகமாக அமையப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மாத்திரமின்றி சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய ஒரே இடமாக ஐக்கிய மக்கள் சக்தி விளங்குகின்றது.

எடுப்புடிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், எடுபடாத கட்சியாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியும் இதற்கு பொறுத்தமானதல்ல.

இலங்கை பல இன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு என்ற வகையில் அனைத்து இனமும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய ஒரு ஆட்சிமுயைறயே இந்நாட்டுக்கு தேவை. ஜனாதிபதி கூறுவதைப் போன்று பேரினவாத ஆட்சி எமக்கு தேவையில்லை.

நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் பௌத்த மதத்தை மதிப்பதுடன், சிங்கள மொழியையும் மதிக்கின்றனர். இதேவேளை தங்களை இலங்கையர் என்றே அடையாளப்படுத்த விரும்புகின்றனர். தொடர்ந்தும் இனவாதத்தை கூறிக்கொண்டு இருப்பதில் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இதற்கு முன்னர் நாங்கள் செயற்பட்டிருந்த போதிலும். இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மோசடிகார்களின் ஆலோசனைக்கமைய செயற்பட்டு வருகின்றது. அதனால் நாங்கள் பிரிந்து வர தீர்மானித்தோம்.

இந்நிலையில் சாதாரண மக்கள் மத்தியிலே பெரும் வரவேற்பை பெற்றுக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தற்போது இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

கடந்த மார்ச் மாதம் வேட்புமனு தாக்கல் செய்தபோது 60 ஆசனங்களையாவது எம்மால் வெற்றி கொள்ள முடியுமா? என்ற எண்ணம் எமக்கு எழுந்திருந்தது. ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அந்த எண்ணத்தை மாற்றியுள்ளன. அரசாங்கம் படிபடியாக வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து வருகின்றது.

இதனால் அரசாங்கத்தின் வெற்றிக்காக வாக்களித்த சிங்கள மக்களும், அரச ஊழியர்களும் அரசாங்கத்தின் மீது அதிர்ப்தியை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் 90 ஆசனங்களை எம்வசப்படுத்திக் கொள்ள முடியும் என்று எமக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் கடந்த தினங்களில் எமக்கு சாதகமாகும் வகையிலான பிரசாரமொன்றை முன்னெடுத்திருந்தார். மத்திய வங்கி ஊழியர்களை அழைத்து அவர்களுக்கு உபசாரங்களை வழங்கி, பின்னர் அவர்களை கடுந்தொனியில் சாடியும் இருந்தார். இதனை ஊடகங்களின் ஊடாக எம்மால் காண கூடியதாக இருந்தது.

இதன்போது தான் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் கடந்துவிட்டது ஆனால் தனது ஆலோசனைக்கமைய எந்த செயற்பாடுகளும் செயற்படுத்தப்படுவதில்லை என்றும், தனது ஆணைகள் அனைத்தும் வெறுமனே கடதாசிகளில் மாத்திரமே இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

'செயல்படும் வீரனின் ஆட்சி ' என்று கூறிக்கொண்டு வந்தவர்களின் ஆட்சி செயற்படாத ஆட்சியாக மாறியுள்ளதை அவரே ஏற்றுக் கொண்டிருப்பதனால் நாங்கள் அவருக்கு நன்றியை தெரிவிப்பதை விடுத்து வேறு என்னதான் தெரிவிக்க முடியும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.