கட்சிகள் மட்டுமே தேர்தல் அலுவலகங்களை அமைக்கலாம். வேட்பாளர்கள் தனி அலுவலகங்கள் அமைக்கும் கட்சிகளின் கோரிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

ஆகஸ்ட் 5ம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று புதன்கிழமை கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுக்களின் முன்னிலை வேட்பாளர்களுடனான சந்திப்பை நடத்தியது.

இதன்போது தேர்தல் விதிகளை கட்சிகளும் வேட்பாளர்களும் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறத்தப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக்குழுவின் உறுப்பினர்களான சட்டத்தரணி நளின் அபேசேகர, பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரட்னாயக்க ஆகியோரடங்கிய குழுவினர் கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுக்களின் பிரதானிகளுக்கு தேர்தல் குறித்து தெளிவுபடுத்தினர்.

கொவிட் -19 நோய்த் தொற்று இந்தத் தேர்தலுக்கு சவாலாகக் காணப்படுகின்ற போதும் அதற்கு முகம்கொடுத்து தேர்தலை நடத்த ஆணைக்குழு தீர்மானித்ததாகத் தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தலை நேர்மையாக நடத்தி முடிக்க சகல தரப்பினரையும் ஒத்துழைக்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் பங்கேற்ற கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் தேர்தல் அலுவலகங்களை அமைப்பதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினையை சுட்டிக்காட்டியுள்ளன. வேட்பாளர்கள் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அவர்கள் எடுத்துரைத்தனர்.

வேட்பாளர்கள் எவரும் தனித்தனி அலுவலகங்களை அமைக்க முடியாது. கடசிகள் சார்பில் வாக்களிப்பு நிலைய பிரிவுக்குள் ஒரு அலுவலகத்தை அமைத்துக் கொள்ள முடியுமென அறிவுறுத்தப்பட்டனர். சுவரொட்டிகள், பதாதைகள், கட்அவுட்களை வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டனர்.

அதேநேரம் வேட்பாளர்கள் மக்களைச் சந்திக்க வீடு வீடாக செல்லும்போது வேட்பாளருடன் இரண்டு பேரை மட்டுமே அழைத்துச் செல்ல முடியும். அதுவும் சுகாதார நடைமுறை ஒழுங்காகப் பேணப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கூட்டங்களை நடத்தும்போது 100 பேருக்கு மேல் அழைக்கப்படக் கூடாது. கூட்டத்தில் பங்கேற்கவர்களின் பெயர்ப்பட்டியலில் முன் கூட்டியே தயாரிக்கப்பட்டு சுகாதார தரப்பினதும், பொலிஸ் தரபபினதும் முன் அனுமதியைப் பெற்றுக்கொள்வது மிக அவசியமானது என எடுத்துக் கூறப்பட்டது.

கட்சிகள் சார்பில் மட்டும் ஒரு வாக்களிப்பு நிலையப் பிரிவுகள் ஒரு கட் அவுட்டை நிறுவ முடியும். பொலிஸ் தரப்பின் ஆலோசனைப் பிரகாரம் அவசியமானால் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் மாவட்டத்தில் போட்டியிடும் தமது வேட்பாளர்களது படங்களுடன் இலக்கங்களை பகிரங்கப்படுத்தலாம்.

தனியொரு வேட்பாளர் பிரசாரக் கூட்டங்களை நடத்த முடியாது. சுவரொட்டிகளை ஒட்டவும் அனுமதி கிடையாது.

எம்.ஏ.எம். நிலாம்
Blogger இயக்குவது.