ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் இந்த வாரம் உருவாக்கப்பட்டுள்ள இரு செயலணிகள் குறித்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆழ்ந்த கரிசனை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு நீதிமன்றம் மறுத்துள்ளதன் பின்னரே இந்த செயலணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது நாடாளுமன்றம் அரசமைப்பினால் அதிகாரம் வழங்கப்பட்ட காலத்திற்கு அதிகமாக கலைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதன் காரணமாக நிறைவேற்று அதிகாரத்தின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தின் எந்த வித கண்காணிப்பும் இல்லாத நிலை காணப்படுகின்றது.
.
இவ்வாறான சூழ்நிலையில் இரு செயலணிகள் நியமிக்கப்பட்டுள்ளமை அரசமைப்பு ஜனநாயகம் மற்றும் இலங்கையின் நல்லிணக்கத்திற்கான கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஏதேச்சாதிகார ஆட்சி மற்றும் இராணுவ மயமாக்கல் குறித்த சிக்கலான போக்குகளை நிருபிக்கின்றன.
மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம் இரு செயலணிகள் குறித்தும் தனது ஆரம்பகட்ட கரிசனைகளை வெளியிடுகின்றது.
இலங்கை ஜனாதிபதி நல்லொழுக்கமுள்ள, ஒழுக்கமான சட்டபூர்வமான பாதுகாப்பான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான செயலணியை நியமித்துள்ளார்.

அதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், முப்படையின் தளபதிகள் பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அந்த செயலணி முன்னாள் மற்றும் தற்போதைய படைத் தளபதிகளை கொண்டுள்ளது.

குறிப்பிட்ட செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை என்பது தெளிவற்றதாகவும் பரந்துபட்டதாகவும் காணப்படுகின்றது, சமூகவிரோத செயற்பாடுகள் என்ற சொற்களிற்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லாததன் காரணமாக, இவ்வாறான நடவடிக்கைகளிற்கு எதிராக செயலணி எவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்கும் என்ற கரிசனை எழுந்துள்ளது.
குறிப்பிட்ட செயலணி நாட்டில் காணப்படும் போதைப் பொருள் பிரச்சினைக்கு எதிரானதா அல்லது பரந்துபட்டதா என்பது தெளிவாகவில்லை.

செயலணி கொள்கைகளை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதா? அல்லது ஏற்கனவே உள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தை கொண்டதா என்பதும் ஏற்கனவே உள்ள குழப்பத்தை மேலும் அதிகரிக்கின்றது.
மேலும் செயலணியின் நோக்கம் என்னவாகயிருந்தாலும், அது ஏற்கனவே உள்ள நிறுவனங்களிற்கு சமாந்திரமான கட்டமைப்பாக செயற்படுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதை மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம் பிரச்சினைக்குரியதாக பார்க்கின்றது.
அமைச்சரவையின் பங்கை தவிர்ப்பதுடன், பொதுச் சேவைக்கு நேரடி உத்தரவை வழங்கும் திறன் கொண்டதாகவும் காணப்படுகின்றது. வேறு பல விவகாரங்களுடன் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இந்த விவகாரங்களும் காணப்படுகின்றன. இவை குறித்து தீவிர கவனம் அவசியம்.

ஜனாதிபதி கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் முகாமைத்துவத்திற்காக மற்றுமொரு செயலணியை நியமித்துள்ளார். பல தசாப்த காலங்களாக பிரச்சினைக்குரிய விடயங்களாக காணப்படுபவற்றை செயலணி கையாளப்போகின்றது.
இரண்டு பௌத்த மதகுருமார், தொல்பொருளியல் பேராசிரியர், மருத்துவ பேராசிரியர் தொல்பொருள் திணைக்க தலைவர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊடக நிறுவனத்தின் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய இந்த செயலணி முற்றுமுழுதாக சிங்கள செயலணியாக காணப்படுகின்றது, இதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமை தாங்குகின்றார். அதன் ஆணையை கருத்தில் கொள்ளும்போது அதில் ஒரேயொரு மதத்தை சேர்ந்த மதகுருவே இடம்பெற்றுள்ளார் என்பது கவனிக்க தக்க விடயம்.

இந்த செயலணி ஒரு தனி இன மேலாதிக்க விவரிப்பை உருவாக்குவதற்காக, வேண்டுமென்றே பிராந்தியத்தின் பல்லின தன்மையை அலட்சியம் செய்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
குடியேற்றங்கள் மற்றும் காணி கையகப்படுத்தும் திட்டங்கள் மூலம் அந்தப்பகுதியின் மக்கள் தொகையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளையும் அதன் காரணமாக தேர்தல் பிரதிநிதித்துவம், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு ஆகியவற்றிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் முன்னர் மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம் சுட்டிக்காட்டியிருந்தது.
இலங்கையின் கடந்த காலம் காரணமாக செயலணி நியமிக்கப்பட்டதன் நோக்கம், தேவை எதிர்காலத்தின் மீதான தாக்கம் ஆகியவை குறித்த கேள்விகள் காணப்படுகின்றன.

நிறைவேற்று அதிகாரம் தனது அதிகாரத்தை பயன்படுத்துவது குறித்து வழக்கமான கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையத்தின் கரிசனைகள், அரசாங்கத்தை இராணுவமயமாக்கும் மற்றும் பாதுகாப்பு மயப்படுத்தும் நடவடிக்கைகள் அதிகரிப்பதுடன் தொடர்புபட்டவை.

முக்கிய முடிவுகளும் முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் ஓய்வுபெற்ற, தற்போது பணியில் உள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸாரின் கரங்களில் வழங்கப்பட்டுள்ளன.
செயலணிகள் தொடர்பான கரிசனைகளும், பதட்டங்களும் துயரங்களும் அதிகரிப்பதற்கான சாத்தியமும், நல்லிணக்கத்திற்கான, நிலைமாற்று நீதிக்கான வாய்ப்புகளை சிதைக்கலாம். இவை இரண்டும் யுத்தத்திற்கு பிந்திய இலங்கைக்கு முன்னுரிமைக்குரிய விடயங்கள்.
இலங்கையில் லிபரல்தாராளவாத ஜனநாயகத்தை பாதுகாப்பது ஊக்குவிப்பது என்ற அடிப்படையில் அரசாங்கமும் அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்களும் தங்களது நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.