(எம்.எப்.எம்.பஸீர்)

பெட்டிகலோ கெம்பஸ் நிறுவனத்துக்கு சொந்தமான, இலங்கை வங்கியின் காத்தான்குடி கிளையில் உள்ள மூன்று வங்கிக் கணக்கு விபரங்களை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவிடம் முன்வைத்த விஷேட கோரிக்கையை அடுத்தே, குறித்த வங்கிக் கிளையின் முகாமையாளருக்கு நீதிவான் இந்த உத்தர்வைப் பிறப்பித்தார்.

13 வங்கிக் கணக்குகளையும் ஆராய கொழும்பு பிரதான நீதிவான் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதியளித்திருந்தார்.

அந்த அனுமதி பிரகாரம் பெறப்பட்டிருந்த அறிக்கைக்கு அமைய, பெட்டிகலோ கெப்மஸ் நிறுவனத்தின் கொள்ளுபிட்டி இலங்கை வங்கிக் கிளையில் முன்னெடுத்து சென்ற வங்கிக் கணக்கின் கணக்கு கூற்று, காசோலை வரவுக் குறிப்புக்கள், வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான குறிப்புக்கள், அட்டை கொடுக்கல் வாங்கல்கள் விபரங்கள் என அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டன.

அதன்படி குறித்த வங்கிக் கணக்கு கடந்த 2016.01.04 ஆம் திகதி இலங்கை ரூபாக்களால் கொடுக்கல் வாங்கல்களை தொடர முடியுமான நடைமுறைக் கணக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டது.

அத்துடன் அந்த கணக்கை ஆரம்பிக்கும் செயற்பாடுகளில், குறித்த நிறுவனத்தின் தலைவர் மொஹம்மட் லெப்பை அலீம் மொஹம்மட் ஹிஸ்புல்லாஹ், பணிப்பாளர் அஹமட் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருடன் expert business consultants எனும் தனியார் நிறுவனமும் தொடர்புபட்டுள்ளமை குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

அத்துரலியே ரத்ன தேரர் 2019 ஜூன் 12 ஆம் திகதி முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய இடம்பெறும் குறித்த விசாரணைகளில், கடந்த 2016.01.14 ஆம் திகதி முதல் 2019.05.31 ஆகிய காலப்பகுதியில் 206 தடவைகளில் குறித்த கொள்ளுபிட்டி வங்கிக் கிளையில் உள்ள கணக்குக்கு 4,436,282,426,.71 ரூபா பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது.

அத்துடன் அந்த பணத்தில் 4,436,246,122.24 ரூபா பணம் 825 தடவைகளில் அக்கணக்கிலிருந்து மீளப் பெறப்பட்டிருந்தன. அவ்வாறு குறித்த வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட தொகையில், 3,640,939,488,72 ரூபா பணம் 07 தடவைகளில் சவூதி அரேபியாவின் INHERITANCE ALI ABDULLAH ALJUFFALIJEDDAH என்பவரால் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாகவும் எப்.சி.ஐ.டி. வங்கி அறிக்கையை பகுப்பாய்வு செய்து நீதிமன்றக்கு அறிவித்திருந்தது.

இவ்வாறான பின்னனியிலேயே தற்போது காத்தாண்குடி இலங்கை வங்கிக் கிளை வங்கியில் உள்ள 3 கணக்குகளின் விபரங்களை விசாரணைகளுக்காக எப்.சி.ஐ.டி. கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.