- Zafar Ahmed - 

சில மாதங்களாய்  ஃபேஸ்புக் பக்கம் தலைவைக்காமல் குடும்பம் ஆபீஸ் என்று பிஸியாக இருந்த போது இரண்டொருவரின் கேள்விகள் இப்படி இருந்தன.

"என்னப்பா..பெரிய பிரச்சினைல ஏதாவது சிக்கி இருக்கீங்க போல,"

"ஏதாவது பாதுகாப்பு கெடுபிடியா "

" என்ன கேஸ் ,வீட்லயா, இல்ல.......???"

"நான் பெரிய ஷேகுவாராத்தனமாய் ஃபேஸ்புக் புரட்சி பண்ணிய ஆசாமி..இவர் சீ ஐ ஏ ஆபீஸர்.. பொலிவியா காட்டில் கடத்திக் கொண்டு போய் நிற்க வைத்து கேள்வி கேட்கிறாராம்"..இந்த ரேஞ்சில் விசாரிக்கும் நபர்கள் சும்மா கூத்துப் பார்க்கத் தகவல் அறியும் கூட்டம்..திரும்ப  ஃபேஸ்புக் வந்தால் ஹிட்லரைக் கண்ட பிரான்ஸ் படைகள் போல காணாமல் போய்விடும்.

அதில் ஒருவர் சில சென்சிட்டிவ்வான பிரச்சினைகளின் லிஸ்டை தூக்கி வந்து " இதெல்லாம் ஏன் ஓய் எழுதுறல்ல ?" என்று கேட்டார்..இப்படியே முருங்கை மரத்தில் ஏறிப் போய் நம்மை நமக்கே கண்ட்ரோல் பண்ணும் கட்டம் பறந்துவிடும் போது விளைவுகள் விபரீதமாகிவிடும்.சில வசனங்கள் யாரோவுக்கோ எரிய ஆப்பு அடிக்கப்படலாம. போலியாய் கம்ப்ளைண்ட் கொடுக்கப்படலாம்..யார் கண்டார்.

ஏதாவது ஒரு தலையிடி விவகாரத்தை எழுத முன்னர் தான் வாழும் நாட்டின் ஜனநாயம் ,ஐசீயூ இல் இருக்கிறதா இல்லை சோபாவில் ஜாலியாக இருக்கிறதா என்ற அடிப்படை அறிவு இருத்தல் வேண்டும்.அட தேசிய விவகாரத்தைவிடுங்கள்.வாய் கிழிய நீதி பேசும் சில சமூகப் பீரங்கிகள் கூட லேசுப்பட்டவர்கள் அல்ல.தமக்கு இடையூறாய் எவனாது முளைத்து வரும் போது எந்தப் படு பாதக இட்டுக்கட்டையும் செய்யத் துணிவார்கள்.

எப்போதும் உணர்ச்சிகளை விற்றுப் புலம்பும் நபர் அல்ல படியால் எனக்கு ஏற்பட்ட சில அசெளகரியங்களை எழுத விரும்பவில்லை.இங்கே அறம், நீதி , உபதேசம் எல்லாமே வெறும் பச்சை மயிர்த்தனமானவை.வாழ்நாள் முழுக்க தலிபான் சிந்தனையில் ஊறித் திளைத்தவன் 'பொன்மகள் வந்தாள் ' ஐ கொண்டாடி எழுதுவான்.தான் மட்டும் வாழ்வில் செழிக்க இன்னொரு குடும்பத்திற்கு சூனியம் செய்தவன் பலஸ்தீனத்தின் கண்ணீர் கதைகளை சேர் பண்ணி இருப்பான்.

அத்தனை பாதைகளும் ரோமுக்குச் செல்வது போல இங்கே பதியப்படும் தொண்ணூற்றொன்பது வீதமான பதிவுகள் லைக்ஸில் போய் முடிபவை.சுய பிம்பத்திற்கானவை.இதற்குப் போய் எதற்கு சீரியஸாய் புலம்பி சீரழிய வேண்டும்.

"நீ அப்படி இரு, இப்படிக் குந்திக் கக்கா போ "என்று ஒருபோதும் இங்கே நான் உபதேச மஞ்சரி நடத்தியதில்லை.சமகாலப் பிரச்சினைகளில் கருத்து சொல்லி இருக்கிறேன்.சமூகத்தைத் திருத்துவதோ உலகத்தைத் திருத்துவதோ எதுவும் என் டப்பாவில் இருந்தது இல்லை.மெமரீஸ் காட்டப்படும் போது சில அரசியல்,சமூக சர்ச்சைகளை ஏன் எழுதித் தொலைத்தோம் என்று இப்போதெல்லாம் எரிச்சல் வருகிறது.வயதும் பொறுப்பும் கூடுகிறது.பிரச்சினைக்குரிய தலையிடிகள் ஆக்கிரமிக்கும் போதெல்லாம் சடாரென்று ஓடித் தப்பி மகளின் முகத்தைப் பார்த்து ப்ரெஷாகவே இப்போதெல்லாம் விரும்புகிறேன்.

பிஸியான ஆபீஸ் வாழ்க்கையில் தான் வாழ்நாளில் பெரும்பகுதி கழிந்தது.அங்கே தமிழ் சுத்தமாய் இல்லை.எனது தாய் மொழி எனக்கு அந்நியமாகிச் சென்று கொண்டிருந்ததால் எழுத்துப் பயிற்சிக்காக மட்டுமே இங்கே தமிழ் எழுத வந்தேன்.மற்றப்படி பெரிய உத்தமப் பம்மாத்துப் புடுங்கித்தனம் எதுவும் இல்லை.சலிப்பு வந்தால் கொஞ்சம் ஒதுங்கிப் போய்விடுவேன்.நான் எழுதியவைகள் சுவாரஷியமாய் இருந்து இருக்க வேண்டும்.நான் எப்போது வந்தாலும் எனக்கு உற்சாக வரவேற்பு செய்ய ஒரு பெரும் கூட்டத்தைப் பெற்று இருக்கிறேன்.

ரஷ்யாவின் மன்னர் பரம்பரையில் கடைசி ஸார் மன்னருக்கு எதிராக பெரும் புரட்சி நடந்து கொண்டு இருந்த போது அதுபற்றிய அறிவோ பிரக்ஞையோ மன்னரிடம் இருக்கவில்லை.ஆட்சி பறிபோனது.ஸார் மன்னர் ஆட்சி கேவலம் தான்.. ஃபேஸ்புக்கில் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் எமக்கு விரும்பியதைச் செய்து கொண்டு ஸார் மன்னராய் இருப்பதே தேகாரோக்கியத்திற்கு நல்லது என்று நினைக்கிறேன்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.