(எம்.மனோசித்ரா)

மில்லேனியம் சவால் உடன்படிக்கை (எம்.சி.சி.) தொடர்பில் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க தூதுவர் எதிர்பார்ப்பினைக் கொண்டிருந்தால் அவ்வாறு எதிர்பார்ப்புக்களை கொண்டிருக்க வேண்டாம் என்று எம்மால் கூற முடியாது.

ஆனால் எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடில்லை என்பதை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கேள்வி : மில்லேனியம் சவால் (எம்.சி.சி.)உடன்படிக்கையில் கையெழுத்திடப் போவதில்லை என்று கடந்த காலங்களில் அரசாங்கம் உறுதியாகக் கூறியது. எனினும் ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளதே?

பதில் : இல்லை. பொதுத் தேர்தலின் பின்னர் ஆராயப்படும் என்றே அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். அவர் அந்த எதிர்ப்பார்ப்புடன் இருப்பதற்கு எம்மால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. பொதுத் தேர்தலின் பின்னர் இதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அவர் எதிர்பார்த்திருந்தால் அவ்வாறான எதிர்பார்ப்பைக் கொண்டிருக்க வேண்டாம் என்று எம்மால் கூற முடியாது. அரசாங்கம் இது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றை நியமித்தது. அந்த குழு முழுமையான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்தோடு அமெரிக்க பாதுகாப்பு ஆலோசனை அதிகாரி நாட்டுக்கு வருகை தந்தார். அவர் வேறு விடயங்கள் பற்றி பேசிய போது இதனைப் பற்றியும் பேசினார். இதன் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் இறைமையை பாதிக்கும் வகையிலான எந்தவொரு திட்டத்தையும் நாட்டில் முன்னெடுக்க இடமளிக்கப்பட மாட்டது என்பதை தெளிவாகக் கூறினார். இந்நிலையில் எம்.சி.சி. உடன்படிக்கை கடந்த அரசாங்கத்தில் கையெழுத்திடும் தருவாயில் இருந்து அதன் பின்னர் கைவிடப்பட்டதால் அதனை எவ்வாறேனும் நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முயற்சியை அமெரிக்க தூதுவர் முன்னெடுக்கக் கூடும். ஆனால் எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் எமது அரசாங்கத்துக்கு இணக்கப்பாடு இல்லை என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி : பொருளாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மத்திய வங்கியின் அதிகாரிகளே தனக்கு தடையாக இருப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச செவ்வாய்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தெரிவித்தார். இதே கருத்தினையே ரவி கருணாநாயக்க போன்றோரும் கூறுகின்றனர். அதாவது மத்திய வங்கி அதிகாரிகள் மீதே இவ் இருவரும் குற்றஞ்சுமத்துகின்றனர். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன ?

பதில் : ரவி கருணாநாயக்க போன்றோர் மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்ட போது சில அதிகாரிகள் அதனை பாராளுமன்றத்தின் தெரிவுக்குழுவிற்கு தெரியப்படுத்திவிட்டானர். அதன் காரணமாகவே அவர் அவ்வாறு கூறுகின்றார். ஆனால் ஜனாதிபதி அது போன்ற பின்புலத்தைக் கொண்டு மத்திய வங்கி அதிகாரிகள் மீது குற்றஞ்சுமத்தவில்லை. அவர்களின் செயற்பாடுகள் மந்தகதியில் இருப்பதன் காரணமாகவே அவர் அவ்வாறு கூறினார் என்றார்.
Blogger இயக்குவது.