(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலின் போது மில்லேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து மிகைப்படுத்தி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் தற்போது பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்தவுடனேயே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்பது தெளிவாகிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மத்திய வங்கி போன்ற அரச நிறுவனங்களுடைய செயற்பாடுகளில் உத்தியோகபூர்வமாக தலையிடுவதை விடுத்து முறையற்ற விதத்தில் செயற்பட்டு ஜனாதிபதி தன்னுடைய பொறுப்புக்களை உணராதவராகின்றார். அத்தோடு தனது தனிப்பட்ட கருத்துக்கு பணி புரிய வேண்டும் என்ற வழிமுறையானது ஜனநாயகம் உள்ள நாட்டிற்கு பாரிய நெருக்கடியாக அமையும்.

ஜனநாயக அமைப்புக்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன. அந்த குறைபாடுகளை சரி செய்வது பாராளுமன்றத்தின் கடமையாகும்.

எனினும் அவ்வாறான குறைபாடுகளை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி ஜனநாயக அமைப்பின் கட்டமைப்பிற்கு வெளியில் சென்று செயற்படுவது பாரதூரமானதொன்றாகும்.

உதாரணமாக விசேட ஜனாதிபதி செயலணிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜனாதிபதி செயலணிகள் நாட்டில் காணப்படும் ஜனநாயக கட்டமைப்பிற்கு அப்பால் செயற்படுவதாகும். பொறுப்பு கூற வேண்டிய அமைச்சர்கள் தமது பொறுப்புக்களிலிருந்து விலகி அதிகாரிகள் மீது அந்த சுமையை திணிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் ஜனாதிபதியை அழைக்க வேண்டுமல்லவா ? ஆனால் அவ்வாறின்றி முன்னாள் பொலிஸ்மா அதிபர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை மாத்திரம் அழைத்து அவர்களில் தாம் இலக்கு வைத்துள்ளவர்கள் மீது குற்றஞ்சுமத்தி உண்மையில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்த ஆணைக்குழு அழைப்பு விடுக்கவில்லை. அதற்கான காரணம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சியின் தலைவராக அவர் பதவி வகிப்பதாலாகும்.

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய மோசடிக்கார்களும் அழைக்கப்படுவதில்லை. இவ்வாறான குற்றச் செயல்கள் புரிந்தவர்கள் ஒன்றிணைந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக தமக்கு பிரச்சினையாக இருப்பவர்கள் மீது பாரிய குற்றஞ்சுமத்தி விடுகின்றனர்.

தேர்தலின் பின்னர் மில்லேனியம் சவால் (எம்.சி.சி.) ஒப்பந்தம் தொடர்பில் சிறந்த முடிவு கிடைக்கும் என்று அமெரிக்க பிரதிநிதி தெரிவித்துள்ளார். எம்.சி.சி. ஒப்பந்தம் பாரதூரமானதொன்றுதான். எனினும் ஜனாதிபதித் தேர்தலின் போது அதனை மேலும் மிகைப்படுத்தி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் தற்போது பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்தவுடனேயே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்பது தெளிவாகிறது.

அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு நாம் மிகுந்த விருப்பத்துடன் இருக்கின்றோம். ஆதாரங்கள் இன்றி நாம் எந்த குற்றச்சாட்டுகளையும் முன்வைப்பதில்லை. அதனை நிரூபிப்பதற்கான அனைத்து ஆதரங்களும் எம்மிடம் காணப்படுகின்றன.

நாம் சந்தேகத்துடன் முறைப்பாடளிப்பதில்லை. எனவே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் அவன்ட் கார்ட் தொடர்பில் முறைப்பாடளித்துள்ளமைக்கான சாட்சிகள் அனைத்தும் எம்மிடம் உள்ளன. சட்டத்தரணிகள் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்றார்.
Blogger இயக்குவது.