மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை எனப்படும் எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் பேராசிரியர் லலிதசிறி குணருவன் தலைமையிலான குழு முன்வைத்துள்ள அறிக்கையின் ஊடாக நல்லாட்சி அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கம் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் எம்.சி.சி உடன்படிக்கைகளில் இரண்டு கட்டங்களாக கைச்சாத்திட்டுள்ளதாக அறிக்கையை கையளித்த குழுவின் தலைவர் பேராசிரியர் லலிதசிறி குணருவன் தெரிவித்தார்.

இதன் கீழ் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாக குழுவின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

எனினும் அந்த நிதி குறித்த கணக்கு விபரங்கள் எவையும் நிதி அமைச்சின் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என பேராசிரியர் லலிதசிறி குணருவன் தெரிவித்துள்ளதாகவும் ஐ.தே.க தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் எம்.சி.சி ஒப்பந்தத்தின் மூலம் இலக்கை அரசுக்கு எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை எனவும் இதனை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்புலத்தில் நல்லாட்சிக்கு நிதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் எம்.சி.சி ஒப்பந்தம் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது போல் தற்போதும் அதேபோன்ற செயற்பாட்டை முன்வைத்து மக்களை ஏமாற்ற அரசாங்கம் முற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.