(நா.தனுஜா)

பொதுத்தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பிரசாரக்கூட்டம் நாளை மறுதினம்  கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஆரம்பமாகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத்தேர்தல் பிரசாரக்கூட்டம் தொடர்பில் அறிவிக்கும் நோக்கில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக இதுபற்றிக் குறிப்பிட்டார்.

இதன்போது நாட்டின் கல்வித்திட்டத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியதைப் போன்றே, இம்முறை தேர்தல் பிரசாரத்தையும் தமது கட்சி புதிய முறையில் மேற்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி பொதுத்தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பிரசாரக்கூட்டம் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு கட்சித்தலைமையகமான சிறிகொத்தாவில் ஆரம்பமாகின்றது.

இம்முதலாவது கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

மேலும் இம்முறை 160 பொதுத்தேர்தல் பிரசாரக்கூட்டங்களை நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், ஒவ்வொரு கூட்டங்களிலும் உயர்ந்தபட்சமாக 100 பேர் வரையில் மாத்திரம் கலந்துகொள்ளக்கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இவற்றுக்கு தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் சாகல ரத்நாயக சுட்டிக்காட்டினார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
கொரொனா வைரஸ் பரவல் நெருக்கடியின் காரணமாக தற்போது ஒன்லைன் மூலமாகவே கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எமது நாட்டில் இணையத்தள வசதி காணப்படுவதால் இது சாத்தியப்பட்டிருக்கிறது.

எனினும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த வசதியைப் பயன்படும் முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தான் கடந்த காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணினியை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம்.

அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பின் தற்போது அனைத்து மாணவர்களும் ஒன்லைன் மூலம் கல்வியைப் பெறமுடிந்திருக்கும்.

இவ்வாறு நாட்டில் நவீன தொழில்நுட்பங்களையும், புத்தாக்கங்களையும் எமது கட்சியே அறிமுகம் செய்து வந்திருக்கிறது. சமூகவலைத்தளங்களின் பாவனை அதிகரித்த போது, அதனை எமது நாட்டில் பயன்படுத்த ஆரம்பித்ததும் ஐக்கிய தேசியக்கட்சியே.

அந்த வகையில் இம்முறை பொதுத்தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் சூம், லிங்ட்இன் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம்.

அதனூடாகப் பிரசாரக்கூட்டங்களுக்கு நேரடியாக வருபவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டாலும், ஏனையவர்கள் தத்தமது வீடுகளிலிருந்தவாறு கூட்டங்களைப் பார்வையிட முடியும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.