ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து 115 பேரை, அக்கட்சியின் செயற்குழு நீக்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

குறிப்பாக, இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வேட்புமனுக்களை பெற்று போட்டியிடும் 54 உறுப்பினர்கள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன், இம்முறை பொதுத் தேர்தல் தொடர்பான கட்சியின் பணிகளில் ஒத்துழைக்காத, உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்த 61 உறுப்பினர்களும் இவ்வாறு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சி அறிவித்துள்ளது.


- ஐ.ம.ச. சார்பில் போட்டியிடும் 54பேர்
- தேர்தல் பணிக்கு ஒத்துழைக்காத 61 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும், சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட 99 பேரின் உறுப்புரிமையை இரத்துச் செய்ய, கடந்த மே மாதம் 29ஆம் திகதி, அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடன், இரு கட்சிகளுக்கிடையேயான புரிந்துணர்வுடன் கூட்டணி உருவாக்கப்பட்டதாக, ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை, கடந்த ஜூலை 21ஆம் திகதி, சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமலேயே நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.தே.க.விலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த குறித்த மேன்முறையீட்டையே நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இது தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட குறித்த மேன்முறையீட்டை, தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வழக்கிற்கான செலவாக ரூபா 25,000 இனை பிரதிவாதிக்கு செலுத்துமாறும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.