பாராளுமன்றத்திலுள்ள 225 பேர்களால் ஐந்து வருடங்களுக்குள் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை நான் தெரிந்து கொண்டேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

அரசியலில் இன்று தலைமைத்துவம் வகிக்கும் அனைவரும் ஓய்வுபெற்று புதிய நபர்களுக்கு பதவிகளில் அமர இடமளித்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியுமென்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

"என்னை பலவந்தமாக அரசியலுக்கு அழைத்து வந்தனர். ஆனால் ஐந்து வருடங்களுக்குள் இந்த நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலுள்ள 225 பேரில் அதிகமானவர்களால் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

இவர்கள் அனைவருக்கும் முடியாது. ஒவ்வொருவரும் தங்களை முன்னேற்றி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளனர்.

அதனால் இவ்வாறான நபர்களுடன் இணைந்து அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. ஜனாதிபதி பதவியிலிருந்து வீட்டுக்கு சென்றாலும் மீண்டும் மீண்டும் ஜனாதிபதியாக மீண்டும் மீண்டும் பிரதமராக எனக்கு அதிகார மோகம் கிடையாது. சர்வ பலம் கொண்ட ஜனாதிபதியாக இருந்து விட்டு வெறும் பாராளுமன்ற உறுப்பினராக கேவலப்பட்டு பாராளுமன்றம் செல்ல எனக்குத் தேவையில்லை.

இன்று அரசியல் தலைவர்களென சொல்லிக் கொள்பவர்கள் ஓய்வுபெற்று வீட்டிற்கு செல்ல வேண்டும். இங்கே இருமிக் கொண்டும், சுகயீனத்துடன் இந்த அரசியலை செய்வதைவிட புதிதாக வருபவர்களுக்கு பதவிகளைப் பெற வாய்ப்பளித்தால் நாட்டை முன்னேற்ற முடியும்" என அவர் தெரிவித்துள்ளார்.

தனது 75ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஹொரவபத்தான பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.