கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொலிவியாவில் நடைபெற இருந்த ஜனாதிபதி தேர்தல் 2-வது முறையாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எவோ மாரல்ஸ் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி எவோ மாரல்சுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.

போராட்டத்தில் பொதுமக்களுடன் இராணுவமும் கலந்துகொண்டதால் மாரல்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார். 

மேலும் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பொலிவியாவில் இருந்து வெளியேறி மெக்சிகோவில் தஞ்சம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த பெண் எம்.பி. ஜூனைன் அனெஸ் தன்னைத்தானே இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டார்.

அந்த நாட்டு நாடாளுமன்றத்தில், ஆகஸ்ட் 2ம் திகதிக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்தி முடிக்க மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மசோதாவுக்கு ஜூனைன் அனெஸ் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து இது தொடர்பாக வழக்கு ஒன்றை அந்நாட்டு தேர்தல் நீதிமன்றில் தொடரப்பட்டது. அதில் செப்டம்பர் 6-ம் திகதி பொதுத் தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் பொலிவியாவில் தற்போது கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 64 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, ஜனாதிபதி தேர்தலை மீண்டும் தள்ளிவைக்க பொதுத்தேர்தல் நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தேர்தல் நீதிமன்றம் செப்டம்பரில் நடைபெறவிருந்த பொலிவிய ஜனாதிபதி தேர்தலை ஒக்டோபர் 18 ஆம் தினதிக்கு மாற்றி உத்தரவிட்டது.

ஒக்டோபர் 18 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் முடிவுகள் சரிவர வெளியாகவில்லை என்றால் நவம்பர் 29 ஆம் திகதி இரண்டாவது கட்டமாக தேர்தல் வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.