கடைசி நாளில் மே.தீவுகள் அணிக்கு 312 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், பந்து வீச்சாளர்கள் அற்புதம் நிகழ்த்தினால் இங்கிலாந்து 2-வது டெஸ்டில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து - மே.தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வென்ற மே.தீவுகள் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ், சிப்லி ஆகியோரின் சதங்களால் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 469 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. 3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் இரத்து செய்யப்பட்டது.

நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் மே.தீவுகள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிராத்வைட் (75), ப்ரூக்ஸ் (68), ராஸ்டன் சேஸ் (51) ஆகியோரின் அரைசதங்களால் மே.தீவுகள் முதல் இன்னிங்சில் 287 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. என்றாலும் பாலோ-ஆன் தவிர்த்தது.

182 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-இன்னிங்சை தொடங்கியது. அதிரடியாக விளையாடி 300 ஓட்டங்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க விரும்பிய இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை தொடக்க வீரராக களம் இறக்கிறது.

பட்லர் டக் அவுட்ஆனார். நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 37 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 16 ஓட்டத்துடனும், ஜோ ரூட் 8 ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 57 பந்தில் 78 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இங்கிலாந்து 19 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் எடுத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இன்று 11 ஓவர்கள் மட்டுமே இங்கிலாந்து விளையாடியது. இதனால் 79 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் மே.தீவுகள் அணிக்கு 312 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 3-வது நாள் ஆட்டம் இரத்து செய்யப்பட்டதால் 6 ஓவர்களில் அதிகமாக விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் 85 ஓவர்களில் மே.தீவுகள் அணியை ஆல்-அவுட் ஆக்கினால் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வாய்ப்புள்ளது.

2-வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி செய்து வரும் மே.தீவுகள் 11 ஓவர் முடிவில் 25 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.