ரணில் விக்ரமசிங்க என்பவர் சிறந்த தலைவர் கிடையாது. அவரது தலைமையில் இதுவரை 17 தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியை தழுவியுள்ளது. 2019 ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கூட சஜித்திற்கு வழங்குவதற்கு ரணில் தயங்கினார். அதனை பிறகு வழங்கினாலும் கூட்டணியிற்கான தலைமைப் பொறுப்பினை சஜித்திற்கு வழங்க மறுத்து விட்டார். அதனால் சமகி ஜன பலவேகய கட்சியினை உருவாக்கி அதற்கு சஜித் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு அக்கட்சி சார்பில் நாம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் ஷிராஸ் மொஹமட் தெரிவித்தார். அண்மையில் நீர்கொழும்பு - சோன்டர்ஸ் ப்ளேஸ் இல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக கம்பஹா மாவட்டத்தில் 21 பேர் போட்டியிடுகிறோம். அதில் நானும், நண்பர் சசிகுமாரும் உள்ளடங்குகிறோம். நாங்கள் இனத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்றுபட்டுள்ளோம். சிறுபான்மை இனம் என்பதற்காக நாங்கள் யாரிடத்திலும் கையேந்தவோ, சண்டைபிடிக்கவோ இல்லை. முப்பது வருட கால யுத்தத்தின் பின்னர் நாம் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, குறிப்பாக முஸ்லிம் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். சமூகத்திலிருந்து ஓரமாக செயற்பட்ட சிறு குழுவொன்றினால் குறித்த தாக்குதல் நடாத்தப்பட்டது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து அனைவரும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி விரல் நீட்டினார்கள். காரணம், தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே 10, 15 தடவைகள் இந்தியாவில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு இது தொடர்பில் ஆரம்பத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அவர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆனால் இப்போது சிறிசேன 800 கோடி ரூபா பெறுமதியான வீட்டில் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

ஆயினும் முஸ்லிம் சமூகத்தின் மீதே தீவிரவாத குற்றம் சுமத்தப்பட்டது. எமது மத்ரஸா பாடசாலைகளை மூட வேண்டும் என்றார்கள். முஸ்லிம்கள் தீவிரவாதத்தினை கையில் எடுப்பதென்றால் 1990 இல் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட போது எடுத்திருக்க வேண்டும். அப்போது நாம் அல்லாஹ்விடம் மட்டுமே கையேந்தினோம். தொடர்ந்து காத்தான்குடியில் 200 இற்கும் மேற்பட்டவர்களை பள்ளிவாசலில் தொழும் போதே கொலை செய்தார்கள். அப்போது கூட நாம் தீவிரவாதத்தினை கையில் எடுக்கவில்லை. 

ஆனால் இப்போது ஒரு கூட்டம் அரசியல் சதி மூலம் தீவிரவாதத்தினை அரங்கேற்றி முஸ்லிம்களையும் கத்தோலிக்கர்களையும் பிரிக்க பார்த்தார்கள். ஆனால் கத்தோலிக்கர்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதனை புரிந்து கொண்டார்கள். 

இந்த மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்குகளும், ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் வாக்குகளும் இருக்கின்றன. இவற்றை குறி வைத்து சகல கட்சிகளும் வேட்டைக்கு வருகின்றன. அவர்கள் இவற்றின் மூலம் பாராளுமன்றம் செல்ல எதிர்பார்க்கிறார்கள். 

சீனாவில் இருந்து வந்த கொரோனாவுக்கு கூட முஸ்லிம் கொரோனா என்றார்கள். எமது மையித்களை எரித்தார்கள். அவ்வாறு செய்தும் சில சிறுபான்மையினர்கள் ஆளும் தரப்பினருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்கள். நீங்கள் ஹிந்துவாக, முஸ்லிமாக அல்லது கத்தோலிக்கராக இருக்கலாம். சிலர் இன்று மொட்டுக்கு மற்றும் யானைக்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் நன்றாக ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று மொட்டுக்கான ஆதரவு பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால் ஜனாதிபதி வீதிக்கு இறங்கி பிரச்சாரம் செய்யும் நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. 

சென்ற முறை நாம் கம்பஹாவில் ஒன்பது ஆசனங்களை வென்றோம். இம்முறை இறைவன் நாடினால் பதின்மூன்று ஆசனங்களை வெல்வோம். அதனை உறுதி செய்வதற்காக நீங்கள் தொலைபேசி சின்னத்திற்கும் எனது இலக்கமான 15 மற்றும் நண்பர் சசிகுமாரின் இலக்கமான 07 இற்கும் புள்ளடி இட்டு அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். இன்னொன்றினையும் கூற வேண்டும். இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மீண்டும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் களத்தில் இறங்கி வாக்கு கேட்க மாட்டேன். அந்தளவு மக்கள் மனதில் பதியும் வரை சேவை செய்வேன். 

நான் 2013 இல் வட மாகாண சபை தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட போது 11 000 இற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை பெற்றேன். அவற்றில் 9 000 அளவான வாக்குகள் தமிழர்கள் எனக்கு தந்தார்கள். 2000 அளவான முஸ்லிம் வாக்குகளே கிடைத்தன. யாழ் மாவட்டத்திலுள்ள கோவில் உட்சவங்களுக்கு உதவியிருக்கிறேன். சிலர் தமது வீட்டில் குளியளறை இல்லை என்றும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றும் கேட்ட போது 686 வீடுகளுக்கு குளியளறைகளை கட்டி கொடுத்தேன். 

அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச "ஷிராஸ் யாழ்ப்பாணத்தில் மினி அரசாங்கமொன்றையே நடாத்துகிறீர்கள்" என்று கூறினார். எனது கதவு எந்நேரமும் உங்களுக்காக திறந்திருக்கும். எங்கள் இருவரையும் வெற்றி பெற செய்யுங்கள் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணியின் வத்தளை நகர சபை உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான சசிகுமார் உட்பட பிரதேச மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.