ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ மற்றும் அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸங்க சேனாதிபதி ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிஸங்க சேனாதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை ஆராய்ந்த போது இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க மற்றும் தேவிகா அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்படும் வரை அமுலாகும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்புமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களினதும் எழுத்து மூல அனுமதி இன்றி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இதனை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என உத்தரவிடுமாறு கோரி, நிஸங்க சேனாதிபதி தமது மேன்முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவன்ற் கார்ட் மெரிடைம்ஸ் சர்விசஸ் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற்காக 355 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றமை மற்றும் இலஞ்சம் வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ மற்றும் அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸங்க சேனாதிபதி ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.