வீட்டுப் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் சமகாலத்தில் கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல முடியுமெனத் தெரிவித்திருக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, ஆகஸ்ட் 5 ஆம் திகதி நாட்டுக்கு சர்வாதிகாரமா, ஜனநாயகமா தேவை என்பதை தீர்மானிக்கும் தேர்தல். இதன் தீர்ப்பு மக்கள் கைகளிலேயே உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரப் பணிகளை ஆரம்பித்து வைத்து, நுகேகொட நாலந்தா ராமயவில் இடம்பெற்ற சமய வழிபாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் அங்கு உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இங்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது, கொரோனா தொற்றுத் தாக்கம் நாட்டை பெரும் பின்னடைவுக்குள் தள்ளிவிட்டுள்ளது. மக்களது வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை மேலோங்கச் செய்வதற்கு முன்னுரிமை கொடுப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கமாகும்.

அந்த இலக்கை அடைவதற்கான பொருளாதாரத்தை வளப்படுத்தும் வேலைத்திட்டத்தை நாம் முன்வைக்கவுள்ளோம். அடுத்த சில தினங்களில் கட்சியின் தேர்தல் கொள்கை விளக்கம் வெளிவரவுள்ளது. வீடுப் பொருளாதாரமும், நாட்டுப் பொருளாதாரமும் சமமாக கட்டியெழுப்புவதனை இலக்காகக்கொண்டே எமது அரசியல் பயணம் முன்னெடுக்கப்படும்.

புதிய இளைய முகங்களை பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரும் நோக்கில் இளம் படையொன்றை நாம் களமிறக்கியுள்ளோம். பெண்கள், இளைஞர்களுக்கே முன்னுரிமை கொடுத்துள்ளோம். அடுத்த பாராளுமன்றத்தில் நிறையவே புதிய முகங்களை பார்க்க விரும்புகின்றோம். மக்களும் புதியவர்களுக்கு அதுவும் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொருட்டே திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றோம்.

கிராமிய மட்டத்திலிருந்து படித்த இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டை கட்டியெழுப்பும்பாரிய பொறுப்பை அவர்களிடம் கையளித்திருக்கின்றோம்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதே எம்முன்னுள்ள மிகப் பெரிய பணியாகும். சர்வாதிகாரத்தின் பக்கம் நாடு செல்வதை தவிர்க்க வேண்டுமானால் நாட்டு மக்கள் இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
எந்தவொரு தரப்புக்கும் வேறு பூசும் கலாசாரத்தை நாம் முன்னெடுக்கப் போவதில்லை. இன ரீதியிலும், மத ரீதியிலும் மக்கள் மனங்களை புண்படுத்த முனையக்கூடாது.

நேர்மையான ஜனநாயக அரசியல் நீரோட்டத்திலேயே ஐக்கிய தேசிய கட்சி அதன் பயணத்தை தொடர்கிறது. இந்த இலட்சியத்திலிருந்து நாம் ஒருபோதும் இடறிவிடமாட்டோம்.

நாட்டில் காணப்படும் நெருக்கடிகள், பிரச்சினைகளுக்கு ஜனநாயக ரீதியில் தீரவு காணக்கூடிய சக்தி ஐக்கிய தேசிய கட்சியிடம் மட்டுமே உள்ளது.

 அதேபோன்று பொருளாதாரத்தை வளப்படுத்தக்கூடிய தூரநோக்கும் எம்மிடமே உள்ளது எனவும் ரணில் விக்கிரமசிங்க இங்கு தெரிவித்தார். இச் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், உபதலைவர் ரவி கருணாநாயக்க உட்பட கட்சி பிரமுகர்களும் வேட்பாளர்களும் பலரும் கலந்துகொண்டனர்.

எம்.ஏ.எம். நிலாம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.