2011 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது ஆட்ட நிர்ணயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் யாவும் போதுமான சாட்சியங்கள் இன்மை எனக் கூறி அந்த விசாரணைகளை நிறைவுக்கு கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியது தொடர்பில் முறையான விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடத்தில் தான் வேண்டுகோள் விடுப்பதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று (03) மாலையில் நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர்,

'நான் 2011ம் ஆண்டு உலகக் கிண்ணம் தொடர்பில் அண்மையில் கூறியிருந்தேன். அந்த விடயம் குறித்து நான் இதற்கு முன்னர் இரு முறைகள் கூறியிருக்கின்றேன். எனது கூற்று தொடர்பில் பொலிஸ் பிரிவினரால் என்னிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொண்டனர். நான் என்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் அவர்களிடம் சமர்ப்பித்தேன். இது தொடர்பில் வீரர்கள் தொடர்பில்லை எனவும் நான் கூறினேன். அப்படியிருக்க பொலிஸ் பிரிவு ஏன் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை வாக்குமூலம் அளிக்க அழைத்தனர் என எனக்கு தெரியாது. எனினும் இத்துடன் தொடர்பான நபர்கள் இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அதிகளவிலான பணத்தினை செலவிடுகின்றனர்.' என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.