கடந்த காலங்களில் புத்தளம் மாவட்டத்தில் இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அதேபோல் தேர்தல் அனுபவங்களை கருத்தில் கொண்டும் எமது கட்சியின் வேட்பாளர்கள் ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களுடன் ஒன்றுபட்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு களமிறங்கியுள்ளனர் என முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கொட்டாரமுல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட வேட்பாளர்களான ஏ.எஸ்.எம். றில்வான், கே.எம். பாயிஸ், எம். பைரூஸ் மற்றும் எம். நியாஸ் ஆகியோரின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (28) கொட்டாரமுல்ல, ஊர்மனையில் நடைபெற்றது.

மேற்படி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது, "முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காகவே நாம் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுகிறோம். இந்த முயற்சியில் எவ்விதமான இனவாத அரசியல் சக்திகளோ இனவாத கொள்கைகளோ இல்லை.
இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு எமது சிவில் சமூகத்தினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் வேறுபாடுகளை மறந்து விட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.

(நீர்கொழும்பு நிருபர்)
Blogger இயக்குவது.