"முஸ்லிம்கள் எமது நாட்டின் கலாச்சாரத்திற்கு மெருகூட்டியவர்கள். என்றும் சமாதானத்தை விரும்புபவர்கள். நீங்கள் எப்போதும் நாட்டை பிரித்துக் கேட்டதில்லை. நாட்டிற்கு எதிராக போர் புரியவில்லை. நீங்கள் கேட்பதென்றால் ஐவேளை தொழுவதற்கு பள்ளிவாசல் கட்டுவதற்காக காணி ஒன்றை மட்டும்தான் கேட்பீர்கள். அது அடிப்படைவாதம் இல்லை" என்று முன்னாள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரும் சமகி ஜன பலவேகய கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான காமினி விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார். 

நேற்றைய தினம் (14) அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள கஹட்டோவிட்ட கிராமத்தில் வேட்பாளரின் இணைப்பாளரும் வர்ணனையாளருமான அஜ்மல் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "எமது மன்னர்கள் இந்தியாவில் இருந்து தமிழ் பெண்களை அழைத்து வந்து மண முடித்தனர். உங்களது மூதாதையர்களும் சிங்களப் பெண்களை மண முடித்தார்கள். உங்களிடம் இருப்பது சிங்கள இரத்தம். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டினை முன்னேற்ற வேண்டும். 

இந்த ராஜபக்சர்களை தோற்கடிப்பதற்காகவே நான் கம்பஹாவுக்கு வந்தேன். நாங்கள் அதற்காக ஒன்றுபட வேண்டும். நான் மௌலவிமார்கள் உட்பட முஸ்லிம்கள் பலருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கியுள்ளேன். வெளிவாரி பட்டதாரிகளை அரச சேவைக்கு முதன் முதலாக உள்ளீர்த்தது நான். டிப்ளோமாதாரிகளையும் அரச சேவைக்கு உள்ளீர்த்தது நான். நான் ஊவாக முதலமைச்சராக இருக்கும் போது அங்கு பாடசாலையொன்றில் ஏற்பட்ட பர்தா பிரச்சினைக்கு தீர்வு வழங்கினேன். 

நான் அமைச்சராக இருக்கும் போது எனக்கு கீழ் இருந்த மூன்று சபைகளின் தலைவர்களாக முஸ்லிம்களை நியமித்தேன். எனக்கு மீண்டும் அமைச்சு கிடைத்தால் கஹட்டோவிட்டவில் இருக்கும் வாலிபர் ஒருவருக்கு நியமனம் வழங்குவேன். என்னிடம் இனவாதமோ மதவாதமோ இல்லை. நாம் அரசாங்கம் அமைத்தால் கோத்தாபய ராஜபக்சவுக்கு விளையாட விடமாட்டோம். அண்ணன், தம்பிகளின் அதிகாரங்களை முடிவுக்கு கொண்டு வருவோம். 

நான் நீர்ப்பாசனத்துறைக்கு அமைச்சராக இருக்கும் போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா என்னிடம் உரிமையுடன் அத்தனகல்ல தொகுதியில் நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான நிதியொதுக்கீட்டை செய்யுமாறு கோரினார். அப்போது அத்தனகல்ல தொகுதியில் நான்கு நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான நிதியொதுக்கீட்டினை செய்தேன். 

அரசாங்கம் ரூபா 5000 வழங்கியது அவர்களது சட்டை பைகளால் அல்ல. சமுர்த்தி பயனர்களுக்கான கொடுப்பனவில் இருந்து கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்டே அது வழங்கப்பட்டது. தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினருக்கான கொடுப்பனவுகளில் கை வைத்தார்கள். 
நாங்கள் 85 ரூபாவிற்கு வழங்கிய அரசிக்கு 98 ரூபா விலை நிர்ணயம் செய்தார்கள். 100 ரூபா டின்மீன் கொடுப்பதாக சொன்னார்கள். அதன் விலை கூடியது. 65 ரூபாவிற்கு பருப்பு வழங்குவதாக கூறினாரகள். ஆனால் விலையினை அதிகரித்தார்கள்.  

கடைசியில் ஜனாதிபதிக்கு தனது அண்ணனின் வாக்குகளையும் தக்க வைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. சாய்ந்தமருதுக்கு நகர சபை கொடுத்து விட்டு மீண்டும் வாங்கி ஏமாற்றினார்கள். மட்டக்களப்பில் இருக்கும் கருணாவை அம்பாறைக்கு அனுப்பி வாக்கு கேட்க வைக்கிறார்கள். அங்கு சென்று கருணா, நான் தான் புலிகள் இயக்கத்தின் தலைவன். நான் தான் 3000 இராணுவத்தினரைக் கொன்றேன். தலதா மாளிகையில் குண்டு வைத்தேன். பிக்குகளைக் கொன்றேன் என்று கூறினார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் ஒரு பக்கத்தில் ஸஹ்ரானுக்கும் மறு பக்கத்தில் ஞானசார பிக்குவுக்கும் பணம் வழங்கினர். அவர்கள் தான் சர்வதேசத்தின் தேவைக்காக நாட்டில் இனவாதத்தை தூண்டுகிறார்கள். இந்த நாட்டினை ஈராக், லிபியா போன்று மாற்றுவதற்கு கோத்தாபயவுக்கு அவசியம் இருக்கலாம். அதனை நாம் சிங்கள, முஸ்லிம் ஒற்றுமை மூலம் நாம் அதனை தோற்கடிப்போம். அதற்கான சூழலை சஜித் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்குவோம். அதற்காகவே இந்த விஜயமுனி சொய்சா கம்பஹாவுக்கு வந்தேன்" என்றும் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் பிரதேசத்தின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிரமுகர் அல்ஹாஜ் ருஸ்தி உஸ்மான், சமகி ஜன பலவேகய பிரமுகர் பவாஸ், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் அல்ஹாஜ் முஸ்தாக் மதனி, முன்னாள் ஜேவிபி பிரமுகர் அரபாத், முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் நாஸர் JP, ஐக்கிய மக்கள் காங்கிரஸ் தலைவர் சுஹைல் மற்றும் வர்ணனையாளர் அல்ஹாஜ் முபீன் உட்பட பல்வேறு விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளின் மூத்த ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுடன் பிரத்தியேக சந்திப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் - சிபான் கமால்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.