இலங்கை பணியாளர்கள் மீது நேற்று (27) நடாத்தப்பட்ட கண்ணீர்ப்புகை பிரயோகம் தொடர்பில் ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் தொழிலை இழந்த நிலையில், ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கை பணியாளர்கள் மீது நேற்று அந்நாட்டு பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இலங்கை தூதரக அதிகாரிகள் சிலர், பணியாளர்களுடன் கலந்துரையாட சென்ற சந்தர்ப்பத்தில் பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றை வழங்கவில்லை என தெரிவித்து பணியாளர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டமையே இதற்கான காரணமாகும்.

எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கே பாதுகாப்பு பிரிவனரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோர்தானின் அல்காரா கெமல்வெகா தொழில் பேட்டையில் தொழிலை இழந்துள்ள சுமார் 500 இலங்கையர்கள் தங்கியுள்ள பகுதியில் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தொழிலை இழந்து சில மாதங்களாகியுள்ள போதிலும், தாய் நாட்டிற்கு திரும்ப முடியாதுள்ளதாக இலங்கையர்கள் கூறுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின், பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனியவிடம் நாம் வினவினோம்.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பணம் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.