(செ.தேன்மொழி)

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்ககார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே காட்டிக் கொடுத்த போது அமைதி காத்து வந்த முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தொடர்பில் பேசுவதற்கு உரிமையில்லை என்று மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.

இதேவேளை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முரளிதரனுக்கு உரிமை உண்டு. அவர் நேரடியாகவே அந்த செயற்பாடுகளில் ஈடுபடாமல் வேறொரு தரப்பினருக்கு துணைபோகும் வகையில் செயற்படுவது முறையற்ற செயற்பாடாகும். அதனை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதன் எவ்வாறு முன்னாள் அமைச்சர் மனோ கணேஷன் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியும். அவர் மனோவைப் போன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்னின்று செயற்பட்டுள்ளாரா? நாட்டு மக்களின் நல்லிணக்கம் மற்றும் ஐக்கியம் தொடர்பில் பேசியுள்ளரா?, அவர் சிறந்த கிரிக்கட் வீரர் என்ற வகையில் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபடுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.

அரசியலுக்குள் வந்து இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கம் வகையில் செயற்பட வேண்டாம் என்றே கூறுகின்றோம்.
இதேவேளை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் நாங்கள் கூறவில்லை. தன்னை வீரனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்றால் தம்பியை தேர்தல் களத்தில் நிறுத்தாமல், தானே தேர்தலில் களமிறங்கியிருக்க வேண்டும். முன்னாள் கிரிக்கட் வீரர்களான திலகரத்ன தில்சான், சனத் ஜயசூரிய மற்றும் அர்ஜூன ரனத்துங்க ஆகியோர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வில்லையா? அவர்கள் தாங்களே களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டார்கள்.

வெற்றி பெற்றவர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள். தோல்வியடைந்தால் சென்று விடுகின்றார்கள். அவர்களைப் போன்று முரளியும் தேர்தலில் நேரடியாகவே போட்டியிடலாம் தானே.
மஹிந்தானந்த அளுத்கமகேவும் தமிழ் மொழியில் உரையாடுவார். அதனை நாங்கள் திருட்டு தமிழ் என்றுதான் கூறுவோம். 'நான் தெரியும் 'நான் செய்து கொடுப்பேன்' போன்ற வசனங்களே அவர் கூறுவார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தின் போதும் இவ்வாறே பேசினார். 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதாக குறிப்பிட்டார்.

தற்போது அவர் எங்கே? இருக்கின்றார். அவரும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களிடமிருந்து சந்தா பணம் சேகரிக்கின்றார். அந்த பணத்தை பயன்படுத்தி இந்த தொழிலாளர்களுக்கு பயன்தரும் செயற்பாடுகள் எதனையாவது செய்துள்ளாரா?
முன்னாள் கிரிக்கட் அணித் தலைவர்களான சங்ககார மற்றும் மஹேல ஜயவர்தனவை மஹிந்தனந்த காட்டிக் கொடுத்த போது. முரளி எங்கே ? இருந்தார். அப்போது மனோ கணேசன் சங்ககாரவுக்கும், மஹேலவுக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். நாங்களும் எமது கிரிக்கட் வீரர்கள் பக்கமே இருந்தோம். எமது தமிழ், முஸ்லிம் இளைஞர்களும் இன பேதம் பாராமல் எம்நாட்டு கிரிக்கட் வீரர்களின் பக்கமே இருந்தார்கள்.

இவ்வாறன நிலைமையில் அமைதிகாத்து வந்த முரளி தற்போது மனோ தொடர்பில் பேசுவது அரசியல் இல்லாமல் வேறு என்ன ? அரசியல் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, அதனை நேரடியாக செய்யுமாறே நாங்கள் கூறுகின்றோம். தான் அரசியல் செய்யவில்லை எனக்காட்டிக் கொண்டு, ஒரு தரப்பினருக்கு துணைபோகும் வகையில் செயற்பட கூடாது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.