மொட்டு அணியினர், உண்மையாகவே தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்றால் கொழும்பு மாவட்டத்தில் அவர்களை தேர்தலில் களமிறக்கியிருக்க வேண்டுமென கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.
அதைவிடுத்து தேசியப் பட்டியலில் வரக்கூடிய உறுப்பினர்களை தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகள் என்றும், அவர்கள் மக்களின் பிரச்சினைகளை தேடியறிந்து தீர்த்து வைப்பாளர்கள் என்றும் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “'தேசியப்பட்டியலில் தமிழ் பேசும் மக்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்போம். எனவே, எங்களுக்கு வாக்களியுங்கள்' என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் மொட்டு அணியினர் கூறுவது கேலிக் கூத்தான விடயம்.
மொட்டு அணியினர் யாசகம் இடுவது போன்று வழங்கும் விடயங்களை காவிச் செல்லும் அளவிற்கு தமிழ் பேசும் மக்கள் தாழ்ந்து போய் விடவில்லை. தமிழர்களுக்கென்று உரிமை மற்றும் சுய கௌரவம் இருக்கின்றது. 
அதேபோன்று தமிழ் மக்களுக்கான விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. மக்களின் உணர்வுகளையும், விருப்பு வெறுப்புகளையும் உணர்ந்துதான் இங்கிருக்கின்ற அனைத்து அரசாங்கங்களும் செயற்பட வேண்டும்.
அதைவிடுத்து ஆட்சி செய்பவர்களுக்கு தேவையென்றால் தமிழர்களை பயன்படுத்துவதற்கும் பின்னர் தூக்கியெறிவதற்கும் அவர்கள் அந்நிய இனத்தவர்கள் அல்ல. 
தமிழ் பேசும் மக்களும் இலங்கையர்கள் என்ற ரீதியில் எங்களுக்கான உரிமை மற்றும் பிரதிநிதித்துவத்தை ஆட்சியாளர்கள் உரியமுறையில் வழங்க வேண்டும்.
இன்று எங்களுடைய பிரதிநிதிகளையே எமக்கு தெரிவு செய்ய முடியாத அளவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள் என்றால், இந்த அரசாங்கம் எதிர்காலத்தில் தமிழ் பேசும் சமூகத்துக்க ஏதேனும் அனுகூலங்களை ஒருபோதும் வழங்கப்போவதில்லை. ” எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.