(செ.தேன்மொழி)

அரச ஊடகங்கள் அரசாங்கத்திற்கே முதலிடம் கொடுத்து செயற்பட்டு வருவதாகவும், பிரதான எதிர்கட்சியான  தங்களுக்கு வழங்கும் காலத்தையும் விட , ஆதரவின்றி இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகமான காலத்தை பெற்றுக் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார , இதுத்தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? அவர் நித்திரையிலா இருக்கின்றார்? என்றும் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து எட்டு மாதம் கடந்துள்ள நிலையில் , எந்தவித செயற்திறனும் இல்லாத அரசாங்கம் என்ற பெயரை பெற்றுக் கொண்டுள்ளது. பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நெருக்கடியை தோற்றுவிக்கும் வகையில் மின் கட்டணங்களை வெளியிட்டு மின் விநியோகத்தை துண்டிக்க முயற்சித்து வருகின்றது. அரச  உத்தியோகத்தர்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.

இராணுவத்தினரையும் , அங்கவீனமடைந்துள்ள இராணுவத்தினரையும் ஆர்பாட்டங்களில் ஈடுபடுத்தி அதன் மூலம் ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கத்தினர். தங்களது ஆட்சியில் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றியுள்ளார்களா? தபாற் மூல வாக்களிப்புகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் பொலிஸாரும் , இராணுவத்தினரும் வாக்களிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பொலிஸாரின் ஊதியத்திலும் கை வைத்துள்ள அரசாங்கத்திற்கு பொலிஸார் உரிய பதிலை பெற்றுக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். இதேவேளை இராணுவத்தினருக்கு நன்மை பயக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை நாங்கள் ஏற்படுத்தி கொடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

வெளிநாடுகளில் தொழில் புரியும் எம்நாட்டு உழைக்கும் வீரர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கத்திற்கு முடியாமல் போயுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளிலிருக்கும் இந்நாட்டவர்களில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஏனைய உலக நாடுகளை விட தாங்கள் கொவிட் -19 வைரஸ் பரவலை முறையாக கையாண்டுள்ளதாக தெரிவித்து வருகின்றார்கள். ஆனால் வைரஸ் பரவல் தொடர்பான உண்மை தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் முறையற்றதாக இருக்கின்றன. மக்கள் வாழுவதற்கான உரிமையையும் , ஜனநாயகத்தையும் அவர்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சர்வாதிகார ஆட்சியின் போக்கிலே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொதுத் தேர்தலில் மக்கள் இந்த விடயங்கள் தொடர்பில் நன்கு சிந்தித்து வாக்களிப்பார்கள் என்று எண்ணுகின்றோம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.