"2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சமகி ஜன பலவேகய இல் போட்டியிடவுள்ளதாக எனது நண்பர், 15 வருடங்களாக மேல் மாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்த ஷாபி ரஹீம் ஏறத்தாள மூன்று மாதங்களுக்கு முன்னர் என்னிடம் தெரிவித்திருந்தார். குறித்த தேர்தலில் நான் போட்டியிடவா? நீங்கள் போட்டியிடுகிறீர்களா? என்று என்னிடம் கேட்ட போது, 15 வருடங்கள் மாகாண சபையினை அலங்கரித்த அனுபவமுள்ள நீங்கள் போட்டியிடுங்கள் என்று கூறியிருந்தேன் என்று சமகி ஜன பலவேகயவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் ஷிராஸ் மொஹமட் தெரிவித்தார்.

பஸ்யாலை, நாம்புளுவ பிரதேசத்தில் (19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

"வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான இறுதி திகதிக்கு முந்திய தினம் மாலை 05 மணியளவில் வருவதாக கூறிய ஷாபி ரஹீமின் வருகைக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் சமகி ஜன பலவேகயவின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நீண்ட நேரம் காத்திருந்தனர். ரவூப் ஹக்கீம் அவர்கள் ஷாபிக்கு தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம், "On the Way" என்ற வசனத்தையே பதிலாக அளித்ததுடன் கடைசி வரை வரவே இல்லை.

அந்த நேரம் தான் இரவு 8.00 மணியளவில் சமகி ஜன பலவேகயவின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளர் காவிந்த ஜயவர்தன என்னை தொடர்பு கொண்டு தேர்தலில் போட்டியிடுமாறு கூறினார். முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுவதற்கு கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால் நான் மறுத்தேன். அதன் பிறகு தொலைபேசியில் என்னுடன் பேசிய சஜித் பிரேமதாச, நீங்கள் கட்டாயம் போட்டியிட வேண்டும். அடையாள அட்டையுடன் வாருங்கள் என்று அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றே நான் தேர்தலில் இறங்கினேன். அங்கு கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், ஷாபி ரஹீம் முனாபிக் தனமாக நடந்து கொண்டார். நீங்கள் கேளுங்கள். உங்களுக்கான ஆதரவை நாங்கள் தருகிறோம் என்றார்.

நான் தேர்தலில் கம்பஹா மாவட்ட மக்களுக்காக களமிறங்கியிருக்கிறேன். உங்களது வாக்குகள் கோடிக்கணக்கான பெறுமதி மிக்கவை. வேட்பு மனுவில் கையொப்பமிட்ட பிறகு மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் சென்றேன். அவர்களது குறைகளை கேட்ட போது,
70 வருடங்களாக பல தலைவர்கள் அவர்களிடம் வந்து வாக்குகளை பெற்று சென்றுள்ளனர். ஆனால் குறிப்பிடும்படி எதுவும் அவர்களுக்கு கிடைத்திருக்கவில்லை.

நான் கஹட்டோவிட்ட பிரதேசத்தில் நான்கு நாட்களாக தங்கியிருக்கிறேன். அங்கு கூறினார்கள், ஒரு அரசியல்வாதி வந்தார். பாட்டு பாடினார். ஆயிரக்கணக்கான வாக்குகளை அள்ளி சென்றார். ஆனால் தேர்தலில் வென்ற பிறகு நன்றி கூறுவதற்கு கூட திரும்பி வரவில்லை.

மற்றும் இருவர் பிரதேசத்தில் சில வாக்குகளை எடுத்து சென்றார்கள். ஆனால் வென்றதன் பின்னர் வரவேயில்லை. எமது மக்கள் வருகின்ற எல்லோருக்கும் வாக்குகளை வழங்குகிறார்கள். ஆனால் கிடைத்தது எதுவும் இல்லை.

சிலர் பயம் காட்டுகிறார்கள், வாக்கு தராவிட்டால் குப்பை அல்ல மாட்டோம் என்று. அவ்வாறு நடந்தால், அவற்றை பிரதேச சபையில் கொட்டுவதற்கு நான் வண்டி அனுப்புவேன்.

நாட்டில் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட போது, ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால இந்தியாவில் இருந்தார். நாட்டில் 300 - 400 பேர் மரணித்திருந்த போது தனி விமானத்தில் அவருக்கு வந்திருக்கலாம். ஆனால் அவர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அவருக்கு நாட்டின் மீது இருந்த அக்கறை அவ்வளவுதான். அவரே அந்த தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டும். ஆரம்பத்தில் தகவல் கிடைத்த போதும் அவர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் எவரும் தீவிரவாதத்தை நாடவில்லை" என்றும் தெரிவித்தார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.