(நா.தனுஜா)

தற்போது நடைமுறையிலிருக்கும் முன்னுரிமை அடிப்படையிலான தேர்தல் முறை முற்றிலும் செயற்திறனற்றதாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அதனை மாற்றியமைப்பதற்கு நீண்டகாலமாக முயற்சித்து வருவதாகவும் எனினும் அதற்கு வலுவான கட்டமைப்புக்கள் அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவுகளிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அவர் அதில் மேலும் கூறியிருப்பதாவது:

கட்சிகளுக்கு இடையிலான மற்றும் கட்சிகளுக்குள்ளான மோதல்கள் அதிகரிக்கும்போது தேர்தல் வன்முறைகளின் அளவும் வெகுவாக அதிகரிக்கின்றது. தற்போது நடைமுறையிலிருப்பது போன்ற முன்னுரிமை அடிப்படையிலான தேர்தல்முறை முற்றிலும் செயற்திறனற்றதாகும். இந்த முறையைத் திருத்தியமைப்பதற்கு நான் சுமார் இரு தசாப்தகாலமாக முயற்சித்து வருகின்றேன். அதற்கு மேலும் பொறுப்புவாய்ந்த கட்டமைப்பொன்று அவசியமாகும்.

அதேவேளை இம்முறை தபால்மூல வாக்கெடுப்பில் குறைந்தளவான வாக்குகளே பதிவாகியுள்ளமையானது ஸ்திரமான அரசியலில் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதையே வெளிப்படுத்துகின்றது.

அதுமாத்திரமன்றி தற்போது நடைபெற்றுவரும் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உரிய சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் மற்றொரு பதிவில் அவர் பின்வருமாறு சுட்டிக்காட்டியிருக்கிறார்.
எவரொருவரும் சட்டத்தைமீறி செயற்பட முடியாதவாறான நாடொன்றையே மக்கள் விரும்புகின்றார்கள். எனினும் அண்மைக்காலத்தில் தொல்பொருட்கள் சார்ந்து இடம்பெற்ற சில சம்பவங்கள் சட்டத்தை மீறி அரசியல் இடம்பெற முடியுமா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்நிலை தொடருமாக இருந்தால் மக்கள் சட்டங்களின் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிடுவார்கள். எனவே மக்களிடம் எழுந்திருக்கின்ற சந்தேகத்தை நீக்கி, அவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.