அல் முஹ்ஸின் விஞ்ஞான கல்லூரி மற்றும் Gampaha Progressive Society (GPS) ஆகியவற்றின் ஸ்தாபக தலைவரும்,  பிரபல சமூக சேவகருமான மள்வானையை சேர்ந்த அல்ஹாஜ் இஸ்மாயில் அவர்கள் சியன ஊட வட்டத்திற்கு வழங்கிய விசேட நேர்காணல்


கேள்வி : உங்களைப் பற்றி சிறிது கூறுங்கள்?

பதில் : நான் மள்வானை இஸ்மாயில ஹாஜியார் என்று எல்லோரும் அழைக்கப்படுகிறேன். "அல் முஹ்ஸின் பவுன்டேசன்" என்ற பெயரில் நாங்கள் ஒரு விஞ்ஞான கல்வி கூடத்தினை உருவாக்கினோம். தற்போது அதில் க.பொ.த. உயர் தர விஞ்ஞான பிரிவினை சேர்ந்த 95 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். இதனை ஏறத்தாழ பத்து வருடங்களாக நாங்கள் நடாத்தி வருகின்றோம். இதில் கல்வி கற்ற மாணவர்களில் இதுவரை 18 பேர் மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளனர். அதே போன்று நூற்றுக் கணக்கானோர் பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளிலும் கற்று வருகின்றனர்.

உண்மையில் இந்த சேவையினை நாங்கள் முன்னெடுப்பதற்கான காரணம், கம்பஹா மாவட்டத்தில் இங்கு விஞ்ஞான பிரிவு மூடப்படும் நிலையில் காணப்பட்டது. அதனால் இதனை உருவாக்கி ஆசிரியர்கள் பலரையும் நாங்கள் பெற்றுக்கொண்டோம். தற்போது கம்பஹா மாவட்டத்திற்கு மாத்திரமல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் தேவையான ஆசிரியர்கள் இங்கிருந்து உருவாகி வருகின்றனர். அவ்வாறு ஒரு பாரிய பணியினை நாங்கள் ஆற்றி வருகின்றோம்.

கேள்வி : முஸ்லிம் சமூகத்தின் அரசியல் வகிபாகம் குறித்து நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?

பதில் : அரசாங்கம் என்று வரும் போது அவர்கள் எமது வரிப்பணத்தினை பெற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் எமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமைகள் எனும் போது கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஏனைய விடயங்கள் இருக்கின்றன. அரசாங்கம் என்று வரும் போது சமூகத்திற்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறது. அவர்களிடம் இருந்து எமக்கான உரிமைகள் மற்றும் சலுகைகள் கிடைக்கப்பட வேண்டும்.

ஆனால் அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் இணைந்தால் தான் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும். எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் நாம் எமது சமுதாயத்தின் கோரிக்கைகளை முன்வைத்து அரசியலில் ஈடுபட்டால் அது எமக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்கும் நல்லதாக அமையும்.

அப்படியில்லாமல், நாம் எமது கட்சியினை பாதுகாக்க வேண்டும். நாம் இருந்த கட்சியிலேயே இருப்போம் என்று சொல்லி அரசியல் செய்யக்கூடியவர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். இவ்வாறு பேசிப்பேசியே நாங்கள் பத்து வருடங்களை கழிப்போமா? அல்லது அதன் பின்னர் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக சிந்திப்போமா என்பதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கேள்வி : முஸ்லிம் சமுதாயத்திற்கு தற்போது இருக்கும் பிரச்சினைகள் என்ன?

பதில் : சிறுபான்மையாக வாழும் நாம் எவ்வளவோ துறைகளில் பின்தங்கி இருக்கிறோம். மையித்தினை எரிக்கிறார்கள் என்றும் துவேசம் பேசுகிறார்கள் என்றும் நாம் தோல்வியடையக்கூடிய கட்சிகளுக்கு வாக்குகளை வழங்கினால் எமது சமுதாயத்திற்கு பாரிய பின்னடைவு ஏற்படும். அதனை நாங்கள் மிக கவனத்தில் எடுக்க வேண்டும்.

கேள்வி : ஆளும் கட்சி சார்பில் ஏன் முஸ்லிம் ஒருவர் கம்பஹா மாவட்டத்தில் நிறுத்தப்படவில்லை?

பதில் : முஸ்லிம் ஒருவர் நிறுத்தப்படவில்லை என்பதனை விட முஸ்லிம் ஒருவர் நிறுத்தப்பட்டதனால் என்ன நடந்தது என்று சிந்திப்பதே நன்று. நாம் இந்த மாவட்டத்தில் 5.9 வீதம் அளவில் வாழ்கிறோம். அவ்வாறு இருக்கும் போது முஸ்லிம் ஒருவர் வெல்லவே முடியாது. நாம் தோல்வியடைந்த ஒரு வேட்பாளரிடம் கூறினால் எந்த வேலையினையும் செய்து கொள்ள முடியாது.

பெரும்பான்மை சமூகத்திலுள்ள சிங்களவர்கள் மிக நல்லவர்கள். அவர்களிடம் எமது தேவைகளை கூறினால் கட்டாயம் செய்வார்கள். செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் முஸ்லிம் ஒருவரை மாகாண சபைக்கோ பிரதேச சபைக்கோ அனுப்பி பெற்றுக்கொண்டதனை விட பாராளுமன்றத்திற்கு அனுப்பிய பெரும்பான்மை உறுப்பினரால் நிறைய வேலைகள் செய்திருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியும்.

கேள்வி : கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் கல்வி நிலை பற்றி?

பதில் : 1989 இல் பிரேமதாச காலத்தில் 10, 20, 30 வருடங்கள் பணியாற்றி ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்று செல்லலாம் என்று கூறப்பட்டது. வியாபார சமூகமான முஸ்லிம்களில் பல ஆசிரியர்கள் ஓய்வு பெற்றாரகள். அப்போது எமது கல்வி மிகவும் வீழ்ச்சியடைந்தது. முன்னாள் அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் உயர்த்தி விட்ட கல்வி அந்த நேரம் வீழ்ச்சியடைந்து. கம்பஹா மாவட்டத்திலும் எமது சமூகத்தின் கல்வியானது கீழ் மட்டத்திற்கே இறங்கி விட்டது.

ஆனால் பிற்காலத்தில் முதலமைச்சராக பதவியேற்ற பிரசன்ன ரணதுங்க எமது மாவட்டத்தில் போதியளவு தமிழ் மொழி மூலமான ஆசிரியர்களை கொடுத்து அக்குறையை நிவர்த்தி செய்தார். எமது சமுதாயத்தின் கல்வி நிலையை அவர் ஓரளவு முன்னுக்கு கொண்டு வந்தார்.

நாம் நன்றியுடையோராக இருக்க வேண்டும். அவர் எமது பல பாடசாலைகளுக்கு கட்டடம் கொடுத்திருக்கிறார். இவ்வாறு சேவை செய்யக்கூடிய சிங்களவர்கள் இருக்கும் போது ஒரு முஸ்லிமைத்தான் நாங்கள் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. எமக்கு அதற்கான வாக்குப்பலம் ஒரு காலத்தில் கிடைத்தால் அது பற்றி சிந்திக்கலாம்.

அதனால் இம்முறை நாம் எல்லோருமாக சேர்ந்து மொட்டு சின்னத்திற்கு வாக்குகளை அளித்து எமது உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்தால் எமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த அடித்தளத்தினை இட்டு செல்லலாம். அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் துரோகம் இழைத்தவர்களாக மாறிவிடுவோம்.

சிங்களவர்கள் எம்மை விட்டு தூரமாகி இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் மற்றும் அரசியலில் ஒன்று சேர்கிறோம். வியாபாரத்தில் ஒன்று சேர்வதை பெரும்பான்மையின சில மதகுருமார்களே தூரமாக்குகின்றனர். அரசியலில் ஒன்று சேர்வதனை நாங்கள் தூரமாக்கி வருகின்றோம். இது தொடர்ந்தால் இரு சமூகத்தினரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் சந்தேகத்துடன் வாழும் சூழ்நிலை தொடர்ந்தால் இது முஸ்லம்களுக்கு நல்லதாக இருக்காது என்று கூறிக்கொள்கிறேன்.
Blogger இயக்குவது.