பாகிஸ்தான் அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட  இங்கிலாந்து சென்றுள்ளது.

தற்போது அந்த அணி வீரர்கள் வொர்செஸ்டர்ஷைரில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் துருப்புச்சீட்டாக நட்சத்திர துடுப்பாட்ட வீரர் பாபர் அசாம் விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் முச்சதம் அடிப்பதுதான் இலக்கு என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாபர் அசாம் கூறுகையில் ''என்னை இந்திய அணித் தலைவர் விராட் கோலியுடன் ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த துடுப்பாட்ட ஜாம்பவான்கள் ஜாவித் மியான்தத் மற்றும் முகமது யூசுப் உடன் ஒப்பிட்டால் மகிழ்ச்சி அடைவேன்.

இங்கிலாந்தில் இதற்கு முன் நடைபெற்ற தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடியுள்ளோம். இதனால் வீரர்கள் இந்த தொடரை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது எங்களுடைய கவனம் இந்தத் தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான். இதுதான் இந்த தொடரின் முதல் இலக்கு.

இங்கிலாந்து அணிக்கு சொந்த மண் சாதகமக இருக்கும். ஆனால் எங்களுடைய பந்து வீச்சாளர்கள் அவர்களுடைய துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள். அவர்களின் பலவீனமான தொடக்க துடுப்பாட்ட வீரர்களை நாங்கள் குறிவைப்போம். முகமது அப்பாஸ் அனுபவமான வீரர். நசீம் ஸா, ஷஹீன் அப்ரிடி ஆகியோரின் அதிகமான திறன் உள்ளது. நாங்கள் எங்கள் பந்து வீச்சாளர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளோம்.

நீங்கள் சதம் அடிக்கும்போது, இயற்கையாகவே அதனை இரட்டை அல்லது முச்சதமாக மாற்ற விரும்புவீர்கள். இந்த விஷயத்தை நான் இந்த தொடரில் கட்டாயம் செய்ய விரும்புகிறேன். நான் எனது வழக்கமான ஆட்டத்தை போல விளையாட விரும்புவேன். ஆனால் என்னுடைய துடுப்பாட்ட நிலை மட்டும் பந்து வீச்சாளர்களை சார்ந்திருக்கும்''என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.