தமது பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை நாளை காலை 7.30 மணியுடன் நிறைவு செய்ய பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரதமர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைய வழக்கொன்று தொடரப்படும் போது அதனை சுகாதார வைத்திய அதிகாரியிடம் விசாரித்து மேற்கொள்ளவும், பொது சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிக்கு இடையில் இது தொடர்பில் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் பிரதமர் முன்னிலையில் தமது இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (28) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர்கள் இவ்வாறு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

அதன்படி, கடமையில் ஈடுபடும் போது தனிமைப்படுத்தல் மற்றும் நோய்கள் தடுப்பு கட்டளைச் சட்டம் மீறப்படாதவாறு செயற்பட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதன்போது இணங்கியுள்ளது.

இதன்போது, சேவையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் அந்த சங்கத்தினால் பிரதமருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.