மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால விடுமுறையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, பாடசாலைகள் ஜூலை மாதம் 27 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், குறித்த வாரத்தில் தரம் 11, 12, 13 ஆம் ஆண்டு மாணவர்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், ராஜாங்கனை, வெலிகந்த கல்வி பிரிவுகளில் எந்த பாடசாலைகளும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளை மீற திறப்பது தொடர்பில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகள் நேற்று (17) கல்வி அமைச்சிடம் பெற்றுக் கொடுக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் இன்றைய தினம் (17) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலின் பின்னர் வரும் முதலாம் திங்கட் கிழமையான ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகளை ஏனைய தர மாணவர்களுக்காக திறப்பது பொருத்தமானது என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், உயர்தர மற்றும் 5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சைகளை நடாத்துவதற்கான புதிய திகதி எதிர்வரும் திங்கட்கிழமை (20) அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.