வாசலில் வீசும் மலரின் வாசம் வீட்டாருக்கு புரிவதில்லை என்று சொல்வது போலத்தான் ஒரு ஆளுமையின் அருமையும் அவர் சார்ந்த சமூகத்தால் சரியாக உணரப்படுவதில்லை.

இஸ்லாமிய சமூகத்தில் இருந்து நான் எழுதுகிற இந்த குறிப்புகள் நிச்சயம் கவனிக்கப்படும் என்று நம்புகிறேன்.

தந்தை செல்வா தொடக்கம் அமிர்தலிங்கம் ஊடாக பயணிக்கிற தமிழ்த்தேசியத்திற்கான அஹிம்சை வழி போராட்டம் பல மேடு பள்ளங்களை சந்தித்திருக்கிறது.

தமிழர் பிரச்சினைக்கு ஆயுத வழியில் தீர்வு காண புறப்பட்டவர்கள் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், லக்‌ஷ்மன் கதிர்காமர், ஜோசப் பரராஜசிங்கமென கன பேரை பாகுபாடில்லாமல் போட்டுத்தள்ளி விட்டார்கள்.

சம்பந்தன் ஐயா ஏதோ ஒரு வகையில் தப்பி பிழைத்தார். அவர் இது வரை காலமும் வழங்கிவருகிற அரசியல் தலைமையும் பங்களிப்பும் அளப்பரியது. அவர் வயோதிபத்தின் உச்சத்தை அடைந்தபோதும் தனது இனத்திற்காக ஓயாமல் கர்ஜிக்கின்ற வீரச்சிங்கமாக இருக்கிறார்.

சம்பந்தன் ஐயாவிற்கு பிறகு யார் என்ற கேள்வியோடு தமிழர் பிரச்சினையினை தீட்சண்யத்தோடு அணுகக்கூடிய தலைமை யார் என்கிற கேள்வியும் இணைந்து எழுகிற போது விடையாக வந்து விழுவது சுமந்திரன் என்கிற பெயர்தான்.

இதுதான் இன்று தமிழ்ப்பரப்பில் போட்டி அரசியல் செய்கிறவர்களுக்கு மாத்திரமல்லாது “வீட்டிற்குள்ளேயே” எரிச்சலையும், பொறாமையினையும் ஏற்படுத்த காரணமாகியிருக்கிறது.

சுமந்திரன் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி, மிகச்சிறந்த அறிவுப்பின்புலமும் தர்க்க நியாயங்களும் கொண்ட அரசியல் ஞானி (Statesman) .

அவர் சாதாரண அரசியல்வாதியல்ல.

கடந்த பாராளுமன்றத்தில் இடம்பெற்ற காத்திரமான விவாதங்களில் இரண்டு பேரின் ஆங்கில விவாதங்கள் சர்வதேச தரத்தில் இருந்தன. ஒன்ற சுமந்திரனுடையது மற்றையது ஹக்கீமுடையது.

2018 ல் இடம்பெற்ற அரசியல் சதியின் போது பாராளுமன்றம் களேபரப்பட்ட போதெல்லாம் இடம்பெற்ற விவாதங்களில் சுமந்திரனது வாதம் extra ordinary. எதிரிகள் வாயடைத்துப்போய் குந்திக்கொண்டிருக்கும் அளவு அவரது தர்க்க நியாயங்கள் இருந்தன.

இதனைத்தான் தெரிவு செய்யும் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

ஒரு சமூகத்தின் தலைவன் இவ்வாறுதான் இருக்கவேண்டும்.

அவ்வாறான தலைமைகளுக்கு ஆசைப்படுகிறவர்கள் தங்களை அதற்குரிய திறமைகளால் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அறிவை வளர்க்க வேண்டும், அந்த அறிவு சான்றிதழ்ப்படுத்தப்பட வேண்டும், ஆங்கிலத்தை வளர்க்க வேண்டும் அத்தோடு ஆளுமையினை வளர்க்க வேண்டும்.

தனி மனித ஒழுக்கமும் பண்பாடும், நேர்மையும், பேச்சுத்திறணும் சமாந்தரமாக வளர்ந்திருக்க வேண்டும். இவ்வாறானவர்கள் சமூகங்களின், தேசங்களின் அரசியல் தலைமைகளாக வளர்ந்திருக்கிறார்கள்.

சுமந்திரனிடம் மேற்சொன்ன பண்புகளும், தராதரங்களும் நிரம்பவே இருக்கின்றன.

அத்தோடு தான் சார்ந்த சமூகத்தின் பிரச்சினைகளை அஹிம்சை வழியில், புத்தி சாதுர்யத்தால் தீர்க்க முடியுமென நம்புகிறார்.

இவருக்கு போட்டியாக யாராவது வர விரும்பினால் அதற்குரிய முழு உரிமையும் சுதந்திரமும் அடுத்தவருக்கு இருக்கிறது.

ஆனால் போட்டியிடுகின்றவர் மேற்சொன்ன தராதரங்களையும், பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும் அப்போதுதான் இரண்டு சிறந்த தேர்வுகளில் அதிசிறந்ததை மக்கள் தீர்மானிப்பார்கள்.

மாறாக ஒரே கட்சிக்குள் இருந்து கொண்டு குழிபறிப்பது, பத்திரிகையில் தவறான செய்திகளை எழுதி தரமிறக்க முயல்வது, கூலிக்கு ஆள்வைத்து பேஸ்புக்கில் எழுதுவது போன்ற எளிய நடை முறைகளால் சுமந்திரனை போன்ற ஆளுமைகளை வீழ்த்தி விடமுடியாது.

சுமந்திரனை போன்றவர்களின் அறிவு ஆற்றல் என்பனவெல்லாம் அவர் சார்ந்திருக்கும் சமூகத்திற்கு மாத்திரம் சொந்தமானதல்ல, முழுத்தேசமும் பயன்படுத்த வேண்டியவை.

துரதிஷ்டவசமாக நாம் பெருத்தேசியவாத நஞ்சூட்டப்பட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பதால் அது சாத்தியமில்லாமல் இருக்கிறது.

தமிழ் சமூகம் தலையில் வைத்து கொண்டாட வேண்டிய ஒரு தலைவரை போட்டி அரசியல் வட பகுதியில் எல்லோரையும் போல வாக்கு கேட்க வைத்திருக்கிறது.

உண்மையில் சுமந்திரன் போன்றவர்கள் வீட்டிலிருக்க, லட்சக்கணக்கான வாக்குகளால் மக்கள் தாமாக தெரிவு செய்து அனுப்பவேண்டிய தலைவர்கள் அவர்கள்.

ஆனால் துரதிஷ்டம் தராதரம் இல்லாதவர்களோடு, பண்பாடு வளராதவர்களோடெல்லாம் மல்லுக்கட்ட வேண்டிய சூழலுக்கு இவ்வாறான தலைவர்களும் ஆளாகியிருப்பது பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது.

நிச்சயமாக வடபுல மக்கள் எப்போதும் புத்திசாலிகள். அவர்கள் கையில் வெண்ணையினை வைத்துக்கொண்டு ஒரு போதும் நெய்க்கு அலைகிற பாவிகள் அல்ல.

உங்களது தேசியத்திற்கான ஒரு பெருந்தலைவரை, இந்த தேசத்தின் புலமைச்சொத்தை உங்களது வீட்டின் முதன்மையானவரை பல்லாயிரக்கணக்கான வாக்குகளின் அங்கீகாரத்தால் நாடாளுமன்றம் அனுப்புவது உங்களுக்கே பெருமை.

யாழ்ப்பாணத்தில் எனக்கு வாக்கொன்று இருந்திருந்தால் அந்த கெளரவத்தின் பங்காளியாய் ஆகியிருப்பேன்.

- முஜீப் இப்ராஹிம் -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.