(எம்.மனோசித்ரா)


குமார் சங்கங்கார விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை உச்ச கட்ட அரசியல் பழிவங்கலாகும். சர்வதேச கிரிக்கட்சபையின் தலைவராக குமார சங்கங்காரவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தால், அந்த பதவிக்காக போட்டியிடும் ஏனைய நாடுகளிடம் பணத்தை பெற்று எமது நாட்டு வீரர்களை காட்டிக் கொடுப்பதற்காக மஹிந்தானந்த அலுத்கமகே இவ்வாறு குற்றஞ்சுமத்தியுள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடர்பற்றி இப்போது பேசப்படுவதற்கான நோக்கம் என்ன ?

அண்மையில் ஹோமாகம விளையாட்டு மைதானம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் குமார சங்கங்கார மற்றும் மஹேல ஜயவர்தன போன்றோர் கருத்து வெளியிட்டிருந்தனர்.

அது போன்ற பிரம்மாண்டமான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் பட்சத்தில் சாதாரண வீரர்களுக்கு கிரிக்கட் விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்காமல் போகும் என்பதற்காக அவர்கள் அந்த மைதானம் தேவையற்றது என்று கூறினார்கள்.
ஆனால் இதனை அவமானமாகக் கருதியே மஹிந்தானந்த அலுத்கமகே இவ்வாறானதொரு போலியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது உச்ச கட்ட அரசியல் பழிவாங்கலாகும்.

குமார சங்கக்கார என்பவர் இலங்கையில் முன்னணி விளையாட்டு வீரர் என்பதைத் தாண்டி உலகலாவிய ரீதியில் மிகப் பிரசித்தி பெற்ற கௌரவம் மிக்க நபராவார். நாட்டுக்கு பெரும் கீர்த்தியைப் பெற்றுக் கொடுத்த அவர்களை இவ்வாறு பழிவாங்குவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
விளையாட்டு வீரர்களால் நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற பெருமையையும் கௌரவத்தையும் விலைமதிக்க முடியாது. எனவே அவர்களை அரசியலுக்குட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறையை நேசிக்கின்ற அதில் மிகவும் ஈடுபாடு கொண்டவராவார். எனவே அவரும் எனது நிலைப்பாட்டுக்கு இணக்கம் தெரிவிப்பார் என்று நம்புகின்றேன்.

கிரிக்கட்டையும் கிரிக்கட் விளையாட்டு வீரர்களையும் அரசியல் பழிவாங்கல்களிலிருந்து பாதுகாப்பதற்கு ஒன்றுணையுமாறு நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கின்றேன். அவர்களை அரசியலுக்கு கீழ்படியச் செய்வதற்கு முயற்சிக்கப்படுகிறது.

விளையாட்டுத்துறைக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக 8 ஆவது பாராளுமன்றத்தில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் என்று அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.