அடித்து, அதட்டி, அச்சுறுத்தி முஸ்லிம்களிடம் வாக்குப் பெறமுடியாது எனத் தெரிவித்துள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத்சாலி, ராஜபக்ஷக்கள்தான் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த எதிரி என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது, "ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட நிலைமைகளை ஆட்சிக்கு வருவதற்குப் பயன்படுத்திய ராஜபக்ஷவினர், அதிகாரத்தில் இருக்கும் காலத்திலாவது பயங்கரவாதிகளைக் கைது செய்யவில்லை. வாக்களிக்கவில்லை என்பதற்காகத்தான் இன்று ராஜபக்ஷக்கள், முஸ்லிம்களைத் துரத்தி துரத்தி நெருக்குவாரங்கள் கொடுக்கின்றனர். இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தும் தைரியம் இவர்களுடனுள்ள முஸ்லிம் மொட்டுக்களுக்கு இல்லை.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மட்டுமல்ல, அவர்களது உறவினர்களின் ஜனாஸாக்களையும் இங்குள்ள சட்டத்தரணிகள், சகபாடிகளால் நெருப்பிலிருந்து பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. இந்த லட்சணத்தில் முஸ்லிம் விரோதிகளிடமிருந்து, எமது சமூகத்தை இந்த முஸ்லிம் மொட்டுக்காரர்களால் எவ்வாறு காப்பாற்ற முடியும்?

சமூகத்துக்காகப் பதவிகளைப் பொருட்படுத்தாது நான்கு தடவைகள் இராஜினாமாச் செய்தவன் நான். ஆட்சி, அதிகாரங்களை அல்லாஹ்தான் தருகிறான் என்பதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கை. தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில், சண்டையிட்டுத்தான்.

மஹிந்தவை விட்டு நான் வெளியேறினேன். தம்புள்ளை பள்ளிவாசலை சில காடையர்கள் உடைக்க வந்த போது, மஹிந்த ராஜபக்ஷவிடம் நான் எடுத்துரைத்த வேளை, "முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் கட்டுவதுதான் வேலை" என்று என்னிடம் சீறிப்பாய்ந்த அவர், அது புதிதாகக் கட்டப்பட்டது என்றார். இது பற்றி அமைச்சர் ஜனக பண்டாரவிடம் கேட்டதற்கு, '68 வருடங்கள் பழைமைவாய்ந்த பள்ளிவாசல் அது' என விளக்கிய போதுதான், மஹிந்தவின் பொய்கள் பற்றித் தெரிந்தது. மறுகணமே நான், அவரது கட்சியிலிருந்து விலகிக் கொண்டேன்.

இவ்வாறானவர்கள் 2005 முதல் இன்று வரை முஸ்லிம்களின் எதிரியாகவே உள்ளனர். முஸ்லிம் ஒருவரை இவர்கள் புதிய அரசில் அமைச்சராக்கவும் இல்லை. இந்நிலையில், இவர்களுடன் ஒட்டிக்கொண்ட முஸ்லிம் மொட்டுக்கள், இன்று வந்து ராஜபக்ஷக்களுக்காக வாக்குக் கேட்பதற்கு வெட்கம் இல்லையா? வட்டிலப்பமும், பிரியாணியும், வாக்குகளும் தருவதற்கு முஸ்லிம்கள் தயாராகவுள்ளதாக மஹிந்த சொல்கிறாரே எதற்காக?
தேசியப் பட்டியலுக்காக ராஜபக்ஷக்களின் கொடுமைகளை மறக்குமாறு கோரும் இந்த முஸ்லிம் மொட்டுக் கோமாக்காரர்கள், ராஜபக்ஷக்கள் எம்மை அழித்த போது, எரித்தபோது எங்கிருந்தனர்?

நல்லாட்சி அரசாங்கம் தனது குடும்பத்தையே பழிவாங்கியதாக இன்று நாமல் கண்ணீர் வடிக்கிறார். கள்வர்களைக் கைது செய்யாமல் கைகட்டி நிற்கவா சொல்கின்றார். எனவே, இவர்களுக்கு பாடம்புகட்ட தொலைபேசிக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.