2011 உலகக் கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதென முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் பகிரங்கமான குற்றஞ்சாட்டினையடுத்து விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு தொடர் வாக்குமூலங்களை முன்னெடுத்து வருகின்றது.

விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, சுமார் 09 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், நேற்று (02.07.2020) அங்கிருந்து வெளியேறினார்.

விளையாட்டமைச்சின் விசேட பிரிவின் முன்னிலையில் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த குமார் சங்கக்கார, விசாரணைகள் முடிவடைந்ததும் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமேயின் குற்றச்சாட்டுகள் மீதான உண்மைகளை அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என நான் நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

இதன் போது ஐ.சி.சி தலைவர் பதவிக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சங்கக்கார, இல்லை, அப்பதவிக்கு அவ்வாறு அழைப்பு விடுக்கப்படுவதில்லை, அதற்கு வேறு விதமான நடைமுறைகள் உள்ளன, எனினும் தற்போது நான் ஐ.சி.சி. தலைவர் பதவி குறித்து சிந்திக்கவில்லை அதனைவிட முக்கியமான வெறு ஒரு விடயம் எனக்கு உள்ளது என்றார்.

மேலும், குறித்த ஊடகவியலாளர் உங்களுக்கு ஐ.சி.சி. தலைவர் பதவி கிடைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சங்கா, இல்லை, எதனையும் செய்வதற்கு எனக்கு அதிக காலம் இல்லை. முதலில் எனக்கு இருக்கும் முக்கிய பொறுப்புகளை நான் சரியாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.