சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் கடந்த 13-ம் திகதி தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. முதல் நாளில் மழை குறுக்கிட்டதால், 45.4 ஓவர்களவே வீசப்பட்டது. இதில் பாகிஸ்தான் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்திருந்தது.


2-வது நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 86 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 223 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 2-வது நாளில் 40.2 ஓவர்களே வீசப்பட்டன.

3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் இரத்து செய்யப்பட்டது.

நான்காவது நாளில் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 91.2 ஓவரில் 236 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான அணி சார்பில் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 72 ஓட்டங்களும், பாபர் அசாம் 47 ஓட்டங்களும், அபித் அலி 60 ஓட்டங்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பிராட் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும்  வீழ்த்தினர்.


பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. 5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 7 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 4-வது நாள் 10.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

நேற்றைய ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தேனீர் இடைவேளை வரை மழையால் போட்டி நடைபெறவில்லை. அதன்பின் போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அத்துடன் போட்டியை முடித்துக்கொள்ள இரண்டு அணி தலைவர்களும் ஒத்துக்கொண்டதால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

ஏற்கனவே முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளதால் 1-0 என முன்னிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி போட்டி 21-ம் திகதி தொடங்குகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.