(இராஜதுரை  ஹஷான்)

 இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு யாப்பு 19 முறை சீர்த்திருத்தங்களுக்குட்பட்டுள்ளமையினால் அரசியலமைப்பின் மூலக்  கொள்கை இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தேவைகளுக்காக அரசியலமைப்பு அடிக்கடி மாற்றமடைந்துள்ளது  மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. புதிய அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.

  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன   தமிழ்- முஸ்லிம் மக்களை புறக்கணித்து அரசியலில் பயணிப்பதாக   சர்வதேச மட்டத்தில் குறிப்பிடப்படும் கருத்து முற்றிலும் தவறு. வடக்கு மாவட்டத்தை தவிர்த்து  ஏனைய 21 தேர்தல் மாவட்டங்களில் பொதுஜன பெரமுன வெற்றிப் பெற்று 130 தொடக்கம் 140 வரையான ஆசனங்களை கைப்பற்றும்.

தீவிரவாதத்திற்கும், அடிப்படைவாதத்திற்கும் மாத்திரமே நாங்கள் எதிரானவர்கள். ஆகவே தமிழ் - முஸ்லிம் மக்கள்   புதிய அரசாங்கத்தில் கட்டாயம் இணைந்துக் கொள்ள வேண்டும். என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2020ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் நாளை மறுதினம் (05)  இடம் பெறவுள்ளது. தேர்தலை அமைதியான முறையில் நடத்த   ஜனாதிபதி , பிரதமர் மற்றும் தேர்தல் ஆணைக்குழு, சுகாதார  தரப்பினர் உட்பட முப்படையினர் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழு  1981  1ம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தை இம்முறை முழுமையாக செயற்படுத்தியுள்ளது.  கொவிட்-19 வைரஸ்   தாக்குதலை  கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள  பாதுகாப்பு சுகாதார  அம்சங்களை வாக்காளர்கள் முழுமையாக  பின்பற்ற வேண்டும். வாக்களாளர்களை காட்டிலும் வேட்பாளர்களுக்கு அதிக  பொறுப்பு வாக்களிப்பு  தினத்திலும், தேர்தல் முடிவுகள் வெளியிடும்  தினத்திலும் உள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம்.

புதிய அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நாட்டுக்கு பொருந்தும் விதத்தில் அரசியலமைப்பினை உருவாக்க வேண்டும். 1978ம் ஆண்டு  உருவாக்கப்ட்ட இரண்டாம் குடியரசு யாப்பு இதுவரை காலமும் 19 சீர்த்திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில்  ஆட்சியில் இருந்த அரசாங்கம் தங்களின் தேவைகளுக்காகவும் எதிர் தரப்பினரை பழிவாங்கும் குறுகிய நோக்குடனும் அரசியலமைப்பினை தேவைக்கேற்ப திருத்தியுள்ளது. அரசியலமைப்பின் 19வது திருத்தம் முழு அரசியலமைப்பினையும் கேள்விக்குறியாக்கி முத்துறையின் அதிகாரத்தையும் கேள்விக்குற்படுத்தியுள்ளது.

 மூல கொள்கையில் மாற்றமடைந்துள்ள இரண்டாம் குடியரசு யாப்பினை மீண்டும் திருத்தம் செய்வதால் எவ்வித பயனும் ஏற்படாது இதுவரை காலமும் இடம் பெற்ற  தவறுகளை திருத்திக் கொண்டு   நாட்டுக்கு பொருந்தும் விதத்திலான  புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.  

ஜனாதிபதி முறைமை, நிறைவேற்றுத்துறை க்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையிhன அதிகாரங்கள்,  தேர்தல் முறைமை மற்றும் சமூகத்தில் புரையோடிபோயுள்ள அதிகார பகிர்வு தொடர்பான விவாதங்கள் ஆகியவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.
பெயரளவில் சுயாதீனமாக செயற்படும் ஆணைக்குழுக்கள் திருத்தியமைக்கப்பட்டு உண்மையான சுயாதீனத்தன்மை ஆணைக்குழுக்களுக்கு   புதிய அரசியலமைப்பின் ஊடாக  வழங்கப்படும். நாட்டுக்கும், மக்களுக்கும்  பொருந்தும் வித்திலான அரசியலமைப்பு புதிய அரசாங்கத்தில்  முதல் காலாண்டுக்குள் நிச்சயம் உருவாக்கப்படும்.

தமிழ்- முஸ்லிம் மக்களின் ஆதரவு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு தமிழ் - முஸ்லிம் மக்களின் ஆதரவு இன்றியமையாததாகும் சிறுபான்மையின மக்களை பொதுஜன பெரமுன புறக்கணித்து செயற்படுவதாக  சர்வதேச மட்டத்தில் குறிப்பிடப்படும் கருத்து தவறானது. பொதுஜன பெரமுன ஒரு இனத்தை மாத்திரம்  பிரதிநிதித்துவப்படுத்தி உருவாக்கப்படவில்லை.  அனைத்து இன மக்களும் இணைந்துக் கொள்ளலாம் என ஆரம்பத்தில் இருந்து அழைப்பு விடுத்தோம். இருப்பினும் ஒரு சில தவறான  புரிதல்கள், மற்றும் சித்தரிப்புக்கள்  தொடர்ந்து இடைவெளி தன்மையினை  காட்டுகின்றது.

  தவறுகளை தீருத்திக் கொண்டு தமிழ்- முஸ்லிம் மக்களை இணைத்துக் கொண்டு  சிறந்த  அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல தயாராக உள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்,  இந்நாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவும் இனங்களை இலக்குப்படுத்தி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவில்லை. பொதுத்தேர்தலில் தமிழ் முஸ்லிம் ம்ககளின்  ஆதரவு  பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். புதிய அரசாங்கத்தில் அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமை அமைச்சரவையிலும்  வழங்கப்படும்.

  தீவிரவாதம், அடிப்படைவாதம் மற்றும் இனவாதம் ஆகியவற்றுக்கு மாத்திரமே நாங்கள் எதிரானவர்கள். தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் எத்தரப்பினருடனும் கூட்டணியமைக்கமாட்டோம். பொதுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பலமான அரசாங்கத்தை  நிச்சயம் ஸ்தாபிப்போம்.

 பொதுஜன பெரமுனவின் வெற்றி தொடர்பான அனுமானம்
  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன   130 தொடக்கம் 140 வரையான ஆனசங்களை நிச்சயம் கைப்பற்றும்  150 ஆசனங்களை முழுமையாக கைப்பற்றுவதே எங்களின் இறுதிவரையான முயற்சியாகும். 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் மொட்டு  சின்னம் வெற்றிப்பெறும் யாழ் மாவட்டத்தில்  நாங்கள் போட்டியிடவில்லை. இருப்பினும் கூட்டணியின் ஊடாக வெற்றிப்பெற்று தமிழ் மக்களின் ஆதரவையும் இம்முறை பெற்றுக் கொள்ள முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு, வன்னி, மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் அமோக வெற்றிப்பெறும். கிழக்கு மாகாணத்தில்  4 ஆசனங்களை கைப்பற்ற எதிர்பார்த்துள்ளோம். அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மாத்திரமே அதிக போட்டித்தன்மை காணப்படுகிறது ஏனைய எந்த மாகாணத்திலும், மாவட்டத்திலும்   பொதுஜன பெரமுனவிற்கு  எவ்வித போட்டியும் கிடையாது.

  ஐக்கிய தேசிய கட்சி இம்முறை நான்கு ஆசனங்களை  கூட கைப்பற்றுமா என்ற கேள்வி  எழுந்துள்ளது. யானை சின்னம்  ஒரு மாவட்டத்தை கூட முழுமையாக கைப்பற்றாது. ஐக்கிய மக்கள் சக்தி பொதுஜன பெரமுன  பெறும் மொத்த  வாக்கில்  கால் பங்கினை பெறும் பொதுத்தேர்தலின் முடிவுகள் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் இருப்பினை தீர்மானிக்கும்.

    பொதுத்தேர்தலின் முடிவுகள் அனைத்தும் பொதுஜன பெரமுனவிற்கு சாதகமாகவே அமையும்.  எதிர்க்கட்சி பதவியை  எந்த கட்சி பெறும் என்பதே எமக்கு உள்ள  பாரிய பிரச்சினை எதிர்க்கட்சி  பதவி வகிக்க கூட தேர்தலில் போட்டியிடும் எதிர்கடக்சிகளுக்கு மக்களாணை கிடைக்காது என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.