(எம்.மனோசித்ரா)

பொதுத் தேர்தலில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு ஐக்கிய தேசிய கட்சியின் தோல்வியல்ல. தவறுகளை கண்டறிந்து கட்சியில் அனைத்து மறுசீரமைப்புக்களையும் மேற்கொள்வதற்கு கிடைத்துள்ள சிறந்த சந்தர்ப்பமாகும். கட்சி தலைமைத்துவத்திற்கு என்னுடைய பெயர் முன்மொழியப்படாத போதிலும் தலைமைத்துவம் வகிப்பதற்கு நான் தயாராகவுள்ளேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியல்ல. எந்த இடத்தில் தவறிழைத்தோம் என்பதை இனங்காண்பதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பமாகவே நான் இதனைப் பார்க்கின்றேன். கட்சிக்கு தேவையான அனைத்து வகையாக மறுசீரமைப்புக்களையும் ஏற்படுத்த வேண்டிய சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

கட்சியை மீளக்கட்டியெழுப்பி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த அரசாங்கம் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்காது என்று நான் நம்புகின்றேன். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இந்த அரசாங்கம் கொண்டுள்ளது. மக்களின் ஆசீர்வாதமும் உள்ளது.

எதிர்வரும் ஓரிரு வருடங்களில் பாரிய பொருளாதார பின்னடைவை நாம் சந்திக்க நேரிடும். இந்த அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க முடியாது என மக்கள் அறிந்து கொள்வார்கள். அந்த நேரத்தில் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற நாம் தயாராக இருப்போம். அதனை தற்போதிருந்தே முன்னெடுக்க வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.