பா.நிரோஸ்

கடந்த வருடம் காலில் நின்று கொண்டிருந்த அமைச்சர் பந்துல குணவர்தன, தற்போது தலைகீழாக நிற்கிறார். சரம் அணிந்துகொண்டு தலைகீழாக நிற்பது ஆபத்தானதென ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவரும் இடைக்கால கணக்கு அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “நாட்டை முடக்க முடிந்தாலும், நாட்டின் அரசமைப்பை முடக்க முடியாது. நாடாளுமன்றத்துக்கே நிதி தொடர்பான அதிகாரங்கள் இருக்கின்றன. அதனைப் புறக்கணிக்க முடியாது.

ஜனாதிபதியோ அல்லது நிதி அமைச்சரால் அரசமைப்பு மீறப்படுவதோ ஏற்றுக்கொள்ள முடியாது. நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே வழங்கப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதம் முதல் பல்வேறு வரி சலுகைகளை அரசாங்கம் கொண்டுவந்திருந்தது. வரி சலுகைகளை அமல்படுத்த வேண்டுமென்றால் நாடாளுமன்ற அனுமதியைப் பெற வேண்டும்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் கொண்டுவரப்பட்ட 'வட்'  திருத்தம் தொடர்பில் பந்துல குணவர்தன ஆகியோர் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தனர். நாடாளுமன்ற அனுமதியில்லாது இவ்வாறு வரி திருத்தங்களைக் கொண்டுவர முடியாதென நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருந்தது. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அன்று நாடாளுமன்றத்துக்குள்ள அதிகாரங்களைப் பாதுகாத்த நீங்கள், இப்போது அரசாங்கத்திலிருந்துகொண்டு நாடாளுமன்றத்தின் அனுமதியில்லாது வரி திருத்தங்களைக் கொண்டு வருகிறீர்கள்” எனவும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.