(செ.தேன்மொழி)

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதாக குறிப்பிட்டு 13,14,16,17 மற்றும் 19 ஆகிய அரசியலமைப்பு திருத்தங்களை இல்லாதொழிக்கவே அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, அமெரிக்க பிரஜையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொடுப்பதற்கே அரசாங்கம் விரைவில் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு முயற்சித்து வருகின்றது.

அமெரிக்காவின் பிரஜையாக ஒருவர் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அவர் அமெரிக்காவுக்காக ஆயுதம் ஏந்தவும் தயாராக இருப்பதாக உறுதிமொழி வழங்குகின்றார். இந்நிலையில் இவ்வாறான உறுதிமொழி வழங்கிய ஒருவர் வேறொரு நாட்டின் ஆட்சிப் பொறுப்புகளில் ஈடுபடுவது நியாயமானதா?

பசில் ராஜபக்ஷவும் இவ்வாறு உறுதிமொழி வழங்கியே அமெரிக்க பிரஜாவுரிமையை பெற்றுக் கொண்டுள்ளார். அவர் இந்த பிரஜாவுரிமையை விட்டுக் கொடுக்கவும் விரும்பமின்றியே இருக்கின்றார். இது தொடர்பில் எமக்கு சிக்கல் இல்லை. ஆனால், இவ்வாறான ஒரு நபருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையோ, அமைச்சு நியமனம் அல்லது பிரதமர் பதவியோ பெற்றுக் கொடுக்கப்பட்டால் அதன் மீது நம்பிக்கை கொள்ள முடியுமா?

இந்நிலையில் ஆளும்தரப்பு எம்.பிக்கள் சிலர் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள செய்தியில் வடக்கில் இடம்பெறும் வழக்கு விசாரணைகள் தமிழ் மொழியில் இடம்பெறுவதாகவும், அவற்றை சிங்கள மொழியிலேயே மேற்கொள்ள வேண்டும் என்றும் செய்தி வழங்கியுள்ளனர். இது பாரிய நெருக்கடி நிலைமையாகும்.

இதேவேளை புதிய அரசியலமைப்பு என்னும் போர்வையில் அரசாங்கம் 13,14,16,17,19 ஆகிய அரசியலமைப்பு திருத்தங்களை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றது போன்றே தோன்றுகின்றது. அதனாலேயே ஆளும் தரப்பினர் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நாட்டை பொருத்தமட்டில் மொழிப் பிரச்சினையே பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் மொழியை அடிப்படையாக கொண்டு பிரச்சினையை தோற்றுவிப்பது தவறான செயற்பாடாகும்.

சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் சிங்கள மொழியில் வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதைப் போன்று தமிழ் மக்களுக்கும் அந்த உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இவற்றை நீக்க முயற்சிப்பதால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்குமே தவிர மாற்றங்கள் எதுவும் ஏற்படாது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.