புதிய தேர்தல்முறை மாற்றமானது தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் இருப்பை, பிரதிநிதித்துவத்தை பாதிக்காத வகையிலேயே முன்னெடுக்கப்படவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (28) நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட வேலுகுமார் எம்.பி., மேலும் கூறியதாவது,

" கண்டி மாவட்டத்திலிருந்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டாவது தடவையும் அதிஉயர் சபைக்கு தெரிவாவது இதுவே முதன்முறையாகும். எனவே, தமிழ் பேசும் சமுகமாக ஒன்றிணைந்து எனக்கு வாக்களித்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவருக்கும், கூட்டணியின் பிரதித் தலைவர்களுக்கும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும், தோழர்களுக்கும் இத்தருணத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எந்தவொரு சட்டதிருத்தத்தையும் மேற்கொள்வதற்கான பெரும்பான்மைப்பலத்தை 9ஆவது பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி கொண்டுள்ளது. எனவே, அந்த பலத்தை ஆளுந்தரப்பு எவ்வாறு, எதற்காக பயன்படுத்தப்போகின்றது என்பதே பிரதான கேள்வியாகும்.

அதேவேளை, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக கொண்டுவரபட்ட 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் எனவும், 13 ஆவது திருத்தச்சட்டம் மறுசீரமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக புதிய அரசியலமைப்பில் புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் இருப்புக்கும், பிரதிநிதித்துவத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத விதத்திலேயே புதிய தேர்தல் முறையை உருவாக்கப்படவேண்டும்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூலி என்ற அடையாளத்தை மாற்றியமைத்து ஏனைய சமூகங்களுக்கு சமனான நிலையில் அவர்களை மேம்படுத்தவதே எமது திட்டமாக இருந்தது. அதற்கான அடித்தளத்தை கடந்த ஆட்சியில் இட்டிருந்தோம். எனவே, சமுக மாற்றத்துக்காக எம்மால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் புதிய ஆட்சியிலும் தொடரவேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.